இந்தியாவின் தேசிய மலரான தாமரையை, பாரதீய ஜனதா கட்சி தனது சின்னமாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
இந்தியாவின் தேசிய மலர் தாமரை மிகவும் புனிதமானது. அது இந்திய கலாச்சாரத்தின் மங்களகரமான சின்னமாகும். லட்சுமி தெய்வத்தின் மலராகவும், செல்வம், வளமை ஆகியவற்றின் குறியீடாகவும் தாமரை இருக்கிறது. தேர்தல் காரணங்களுக்காக, இந்த மலரை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது. இது சின்னங்கள் மற்றும் முத்திரைகள் சட்டம்-1950 கீழ் சட்டவிரோதமானது.
எனவே, பாஜக தாமரை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.