நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ப.சிதம்பரமும், காங்கிரஸுமே காரணம் என விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதியதாக கூறப்படும் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ”பொருளாதார மந்தநிலை திடீரென்று உருவானதல்ல. இது பல ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிவிட்டது. ஆகவே இதற்கு பிரதமர் மோடியையும், அவரது அரசையும் குறை சொல்வது நியாயமாகாது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்காலிகமானதே. அதை பொருளாதார மந்தநிலைக்கு காரனமாக சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சிதம்பரம் வழக்கு குறித்து அதில் எழிதியிருந்த அவர், ப.சிதம்பரம் என்னதான் வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி வெளியே வந்தாலும் அவரும் ஊழலுக்கு துணை போயிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் காலத்திலிருந்தே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் தான் தொழில் தொடங்க முயன்று எந்த தொழிலும் செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
கடைசியாக தன் மகன் நன்றாக பாடுவான் எனவும், தொலைக்காட்சி பாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தனக்கு பிறகு தன் மகனுக்கு யாருமே இல்லை எனவும், தயவுசெய்து அவன் கனவை நிறைவேற்றுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கடிதம் தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.