தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பதில் மனு தாக்கல் செய்ய முறையான அறிவிப்பு அளிக்கப்படவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டதோடு மேலும் அவகாசம் தேவை என வாதிட்டது. இதற்கு, நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், இது நீண்ட நாட்களாக தொடரும் வழக்கு என சுட்டிக்காட்டிய நிலையில், "அமைச்சராக தொடர விருப்பமா இல்லையா?" என்பதைக் குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும், மேலும் கால அவகாசம் வழங்கப்படாது என நீதிமன்றம் கண்டிப்புடன் அறிவித்தது.
போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில், 2024 செப்டம்பர் 26ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னை சேர்ந்த வித்யா குமார் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் ஏ.ஜி. மாசி அடங்கிய அமர்வு பரிசீலித்து வருகிறது.