ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

Siva
திங்கள், 18 நவம்பர் 2024 (07:24 IST)
காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அதிஷி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அபாயகரமான நிலையில் உள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஆரம்பப் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அதிஷி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இன்று முதல் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் இன்னும் சில கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் மட்டுமின்றி, அரசு, மாநகராட்சி, மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் அலுவலகத்தில் பணியாற்றவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள பெற்றோர்கள், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்