ஆதார் அட்டைக்கு விருது வழங்கிய துபாய்

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (14:55 IST)
துபாயில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு ஆதார் எண்ணை அனைத்து துறைகளிலும் கட்டாயப்படுத்தி வருகிறது. ஆதார் எண்ணை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் சார்பில் பலமுறை ஆதார் எண் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இருந்தாலும் மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதில் குறியாக உள்ளது. மொபைல் எண், வங்கி எண், பான் எண் என அனைத்துடனும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் தகவல்கள் மூலம் பலரது வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
அண்மையில் ரூ.500 செலுத்தினால் வாட்ஸ்அப் மூலம் அனைவரின் தனிப்பட்ட ஆதார் தகவல்களும் வழங்கப்படுகிறது என்ற செய்தியும் வெளியானது. இதுபோன்ற செய்திகளுக்கு ஆதார் அடையாள அட்டை ஆணையம், அனைவரின் தனிப்பட்ட தகவல்களும் கசியவில்லை, பாதுகாப்பாக உள்ளது என்று கூறி வருகிறது.
 
இந்நிலையில் துபாயில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்ட மாநாட்டில் ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு, அரசு துறையில் வளர்ந்து வரும் சிறந்த தொழில்நுட்பத்துக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அமீரக துணை பிரதமர் இந்திய அரசின் ஆதார் திட்ட உதவி பொது இயக்குநர் கதிர் நாராயணாவிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்