நிலை கெட்ட மனிதரை நிமிரவைத்த பாரதி

சுரேஷ் வெங்கடாசலம்
வெள்ளி, 11 டிசம்பர் 2015 (13:33 IST)
தனது வாழ்நாள் முழுவதும் மக்களை ஒன்றுபடுத்துவதற்காகப் பாடுபட்டவர் மகாகவி பாரதியார்.


 

 
பாரதி என்ற பெயரைக் கேட்டதும் மனதில் உற்சாகம் ஏற்படுகின்றது. அவரது பண்புக்கு எடுத்துக்காட்டாக அவரது பாடல் வரிகளே திகழ்கின்றன.

"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள்" என்று வாழ்ந்து காட்டியவர் பாரதியார்.
 
மாகாகவி என்றும் யுகக்கவி என்றும் போற்றப்படும் சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார். அவர் உலகம் போற்றும் மக்கள் கவிஞர் என்று போற்றப்படுகின்றார்.
 
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், விடுதலை வீரர் என்று பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக பணிபுரிந்தவர் பாரதியார்.
 
பல்வேறு மொழிப்புலமைகளை வளத்துக் கொண்ட பாரதியார், தமிழ் கவிதையிலும், உரைநடையிலும் புதுமையைப் புகுத்தி, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
 
நாட்டு விடுதலை, சாதி மறுப்பு, பெண் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளிள் அடிப்படையில் ஏராளமான கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
பாரதியார் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயர்களின் கொடூரமான ஆட்சி நடந்து வந்தது. இதைக் கண்டு கோபம் கொண்ட பாரதியார் இந்த கோபம் மக்களிடம் ஏற்படாததன் காரணத்தை தேட முயன்றார்.
 
மக்கள் பயந்த சுபாபம் கொண்டவர்களாகவும், தனிமைபட்டு ஒதுங்கியிருப்பதையும், பல்வேறு பிரிவினைகளுடன் தமக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்வதையும் கண்டார்.
 
எனவே மக்களை ஒன்றுபடுத்த வேண்டியது தனது முக்கியப் பணி என்று உணர்ந்த பாரதியார், மக்களின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் குணங்களை எதிர்த்து தனது படைப்புகளின் வாயிலாகப் போராடினார்.

அதன்படி ஏற்றத் தாழ்வுகளற்ற பொதுவுடைமை சமூகம் படைக்கவேண்டும் என்று விரும்பினார்.
 
இதனால், சமூக அக்கறை, கொடுமைகளைக் கண்டு கொதிப்படைதல், அடிமைத்தனத்தை எதிர்த்துப் பேராடுதல் உள்ளிட்ட பண்புகளை மேம்படுவதற்காகவும், சுயநலம், கோழைத்தனம், பொறுப்பின்மை, பழமை பற்று உள்ளிட்ட பண்புகளை கடுமையாக எதிர்த்தும் பாரதியாரின் கவிதைகள் அனல் கக்கின.
 
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்றும்,
 
"நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 
அஞ்சி யஞ்சி சாவார்-இவர் 
அஞ்சாத பொருளில்லை அவனியிலே"  என்றும்
 
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் 
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்" என்றும் பாடினார்.
 
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இடையூறு செய்யும் போக்குகள் அனைத்தையும் எதிர்த்தும் மேம்பட்ட வாழ்க்கையை அடைவதை உணர்த்துவதாகவும் பாரதியாரின் படைப்புகள் அமைந்துள்ளன.
 
எனவேதான் ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படும் போதும், ஒற்றுமைக்கான அவசிம் பற்றிய தேவையின் போதும் பாரதியாரின் பாடல்கள் முக்கியத்துவம் பெருகின்றன.
 
ஒற்றுமையின் தேவை தொடர்ந்து நீடித்து வருவதால் பாரதியாரின் பாடல்கள் மிகுந்த வீச்சுடன் எடுத்தாளப்பட்டு வருகின்றது.
 
பாரதியாரின் நூல்கள் அனைத்தும் தமிழக அரசினால் 1949 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று பாதியாரின் 134 ஆவது பிறந்தநாள். இந்நாளில் அவரை நினைவு கூர்வதுடன் அவரது படைப்புகளால் உற்சாகம் பெற்று ஒன்று படுவோம்.