ஜல்லிக்கட்டுக்கு குறித்த பல விவாதங்கள் எழுப்பப்பட்டு விட்டன. பொதுவாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறிப்பிட்ட ஜாதியினரின் போராட்டம் என்றெல்லாம் எழுதப்பட்டுவிட்டன.
விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட அப்பட்டமான சாதிய கட்சிகள் தங்களது முகத்தை காட்டிவிட்டன. இன்னும் சில சாதிய கட்சிகள் தஙகளுக்கு ஆதரவாக திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டன.
ஆனால், மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான இந்த ஒருங்கிணைவை அவர்களால் ஒன்றும் முடை மாற்றம் செய்ய இயலவில்லை. பேரலையென திரண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி!
இன்றைய இளைய சமுதாயத்தினர் திரைப்பட வெறியர்களாகவும், குடிகாரர்களாகவும், சமூக வலைத்தளங்களில் மூழ்கி வீணாய்ப் போனவர்களாக சித்தரிக்கப்பட்ட இந்த நேரத்தில் இதோ பார் எங்கள் சக்தியென திரண்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!
இந்நிலையில் ஜல்லிக்கட்டை வெறுமனே இதை ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு சொந்தமானது என்று மீண்டும், மீண்டும் கூறுவது அறியாமையே. அது பழைய வரலாற்றை தக்க வைக்கும் முயற்சியாகவே முடியும். அதை எல்லா மக்களுக்குமான ஒரு விழாவாக கொண்டாட வழிவகுத்துள்ள ஒரு நிகழ்வாக இதனைக் காணுவதே முற்போக்கு! வரலாறு மாற வேண்டும், புதிய கலாச்சாரம் பரவ வேண்டும்.
ஏன், நமது அடையாளமாக, தமிழ் இனத்தின் வரலாறாக கருதப்படும் தமிழ் இலக்கியக்கியங்கள் கூட, கடந்த நூற்றாண்டு வரை ஒரு குறிப்பிட்ட சாதியினரால் மட்டுமே படைக்கப்பட்டவை. அதற்காக இனி இலக்கியங்கள் படைக்கக்கூடாது என சொல்ல முடியுமா? இல்லை படைக்கப்பட்ட இலக்கியங்களை வீணே தூக்கி எறிய முடியுமா?
ஒரு கலை, கலாச்சார, பண்பாட்டு வடிவங்கள் அல்லது கூறுகள் அனைத்து மக்களுக்கும் ஆனதாக மாற்ற முயல்வதே முன்னேற்றத்தை விரும்பும் ஒரு சமூகத்தின், ஒரு இயக்கத்தின் நிலைப்பாடாக இருக்க முடியும். இல்லையென்றால் முற்போக்கு என்பது வெறும் கூச்சலே.
குறிப்பிட்ட சிலப் பகுதிகளில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த, ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய விளையாட்டு இனி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து மக்களும் கொண்டாடுவதற்கு தயாராகியுள்ள நிலைமையை நாம் பெரிய மாற்றமாகவே பார்க்க வேண்டும்.
மற்றொரு விஷயம். கச்சத்தீவு, ஈழ விவகாரம், ஏழு தமிழர் விடுதலை, காவிரி நீர், முல்லை பெரியாறு, மீத்தேன் எரிவாயு, கெயில், நெய்வேலி மின் நிலையம், வீராணம் குடிநீ்ர், பாலாறு, ஊழல், லஞ்சம், வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு பாதுகாப்பு, மதுவிலக்கு, செல்லாத நோட்டு அறிவிப்பு, இன்னும், இன்னும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகளுக்கு போராடாத இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடுவது முட்டாள்தனமாக சிலர் கருதுகிறார்கள்.
இது அவர்களை சொல்லிக் குற்றமா? தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு மாணவர் அமைப்பு இருக்கிறது. விவசாய சங்கங்கள் இருக்கின்றன. தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்த அரசியல் கட்சியும் பொதுவிஷயத்துக்கு போராடி கிழித்த வரலாறு இல்லை. பச்சையான அரசியல், அதிகார பகிர்வுக்காக ஏழை, எளிய மக்களை சுரண்டிக் கொளுத்த அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று வாய் கிழிய பேசுகிறார்கள்.
போராடும் மாணவர்களை, மாணவிகளை, குழந்தைகளை, தாய்மார்களை குற்றம் சொல்ல இவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. இனி, மற்ற விஷயங்களுக்கு போராட, இந்த அபரிமாதமான சக்தியை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற திட்டமிடுதலிலேயே இருக்கிறது.
ஆகவே, வெகுவாரியான இந்த போராட்டக் குரலில் எனது குரலும் சேர்ந்து ஒலிக்க கடவதாக..