சிவபெருமான் லிங்கத்தில் தோன்றிய நாள் மகா சிவராத்திரி

Webdunia
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.
விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன்  உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
 
விரதங்களில் முக்கியமானதாக கருதப்படுவது சிவராத்திரி விரதமாகும். இந்த விரதம், மகா சிவராத்திரி விரதம், யோக சிவராத்திரி விரதம், நித்திய சிவராத்திரி விரதம், பட்ஷிய சிவராத்திரி விரதம், மாத சிவராத்திரி விரதம் என ஐந்து வகைப்படும்.
 
சிவராத்திரி விரதத்தின் பெருமையை கேட்டு எமனும் நடுங்குவதாகவும், இது எல்லா யாகங்களையும், எல்லா தர்மங்களையும் விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.
 
சிவபெருமான், லிங்கத்தில் தோன்றி அருளிய நாள் சிவராத்திரி. பிரம்மா, விஷ்ணுவுக்கும் இடையே ஜோதி வடிவில் தோன்றிய நாள். தேவி பூஜை செய்த நாள் என்று சிவராத்திரி நாளை விளக்குகின்றனர். இது ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரியாகும். சிவனடியார்கள் இதனை  மாதந்தோறும் கடைப்பிடித்து வருகின்றனர்.
 
ஒரு சமயத்தில் பிரளயத்தில் எல்லா உயிர்களுமே மூழ்கி பிரபஞ்சமே அழிய இருந்ததால் அந்த யுகம் முடிவில் இரவு 4 ஜாமங்களிலும் உயிர்கள் அனைத்தும் வாழ்ந்து ஈடேறும் வண்ணம் ஐந்தொழில்களையும் நடத்தியருளும்படி ஈஸ்வரனை அம்பிகை பணிந்து வேண்டினார். அந்த நாளே சிவராத்திரி என்றும் புராணம்  கூறுகிறது.
 
தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது என்றும், அதனால் துன்பப்பட்ட தேவர்களை காக்க சிவபெருமான் தஞ்சை தனது கழுத்தில்  தேக்கி அவர்களை வாழ்வித்தார் என்றும அந்த நாள் இரவே சிவராத்திரி என்றும் கூறுவர்.
 
அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் என்ற அஸ்திரத்தைப் பெற்றதும், கண்ணப்ப நாயனார் குருதி வடியும் லிங்க வடிவிலிருந்து ஈசனின் கண் மீது தனது  கண்களைப் பெயர்த்தெடுத்து பொருத்தி முக்தி அடைந்ததும், பகீரதன் கடுந்தவமியற்றி கங்கையை பூமிக்கு கொணர்ந்ததும், மார்க்கண்டேயனுக்காக யமனையே  சிவபெருமான் சம்காரம் செய்ததும், பார்வதி தேவி அருந்தவமியற்றி சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம்பெற்றுச் சிவனையே உமையொரு பாகமாக செய்தது,  ஆகிய அனைத்தும் இப்புண்ணிய தினத்தில் நிகழ்ந்தவை என்று புராணங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்