போதுமான தூக்கமின்மை ஜலதோஷத் தொற்றை அதிகரிக்கும்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (19:43 IST)
ஒருநாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.


 

 
இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப்பட்டது. அதற்காக அவர்களின் கைகளின் மணிக்கட்டில் தொடுஉணர் கருவி பொருத்தப்பட்டது.
 
அதன்பிறகு அவர்களின் மூக்கில் ஜலதோஷத்தைத் தோற்றுவிக்கும் ரினோவைரஸ் அடங்கிய திரவத்தின் சில சொட்டுக்கள் விடப்பட்டன.
 
இவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு கூர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் எத்தனை பேருக்கு ஜலதோஷம் பிடித்தது என்று கண்காணிக்கப்பட்டது.
 
இந்த பரிசோதனையின் இறுதியில் கிடைத்த முடிவுகள் குறைவான தூக்கம் மனிதர்களின் நோய் எதிர்ப்புத்தன்மையின் வீரியத்தைக் குறைக்கிறது என்பதை உறுதி செய்திருக்கின்றன.
இந்தப் பரிசோதனையில் தூக்கத்தின் கால அளவு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தூக்கத்தின் தன்மை கணக்கில் எடுக்கப்படவில்லை. விட்டு விட்டு தூங்குவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கிறார் என்பது மட்டுமே கணக்கு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 
ஆய்வின் முடிவுகளின்படி, ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குபவர்களோடு ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
 
இந்த ஆய்வை மேற்கொண்ட முதன்மை ஆய்வாளரான கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஏரிக் பிராதர் ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்குமா பிடிக்காதா என்பதை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாக போதுமான தூக்கமின்மை காணப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
 
ஒருவரின் வயது, அவர்களுடைய மன அழுத்தத்தின் அளவு, அவர்களின் இனம், கல்வி, வருமானம், ஒருவரின் புகைக்கும் பழக்கம், இவை அனைத்தையும் விட ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பதே அவருக்கு ஜலதோஷம் பிடிக்குமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
தூக்கம் குறைவதால் வேறுபல நோய்கள் ஏற்படும் என்றும் உடல் பருமனடையும் தன்மையும் அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறாரகள்.
 
மேலும் தடுப்பு மருந்துகளின் பயன்பாட்டையே கூட தூக்கமின்மை மட்டுப்படுத்திவிடக்கூடும் என்று ஏற்கனவே மருத்துவர் எரிக் தெரிவித்திருந்தார்.
 
பொதுவாக மனிதர்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு எட்டுமணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்றும், அப்படி தூங்கினால் தான் மனிதர்கள் ஆரோக்கியமாக செயற்பட முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
 
அதேசமயம் சிலருக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படும் என்றும், வேறு சிலரோ குறைவான தூக்கத்துடன் கூட ஆரோக்கியமாக இருக்க வல்லவர்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.