நா‌ட்டு‌ச் சர்க்கரை - நாடு கடத்தப்பட்ட நல்லவைகள்

அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன்
புதன், 18 ஜூன் 2014 (16:34 IST)
பார்ப்பதற்கு டீசெண்டாக பளிச்சென்று இருப்பதால் நம் இல்லங்களில் கடந்த 30 வருடங்களாக நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது வெள்ளைச் சர்க்கரை. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகத்திற்கு வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.
நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான். இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளைச் சர்க்கரையைச் சொல்லலாம்.
 
இந்த வெள்ளைச் சர்க்கரை வருவதற்கு முன்னர் நாம் எதை பயன்படுத்திக்கொண்டிருந்தோம். கரும்புச் சர்க்கரை (நா‌ட்டு‌ச் ச‌ர்‌க்கரை), வெல்லம், பனை வெல்லம் போன்ற இயற்கைத் தன்மை எந்த விதத்திலும் கெடாத இனிப்பை.
 
கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும். இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.

டாக்டர் போர்பஸ்ராஸ் (Dr.Forbesross) தனது CANCER - ITS CAUSE AND CURE நூலில் கரும்புச் சாறு மற்றம் கரும்புச் சர்க்கரையின் மகத்துவத்தைச் சொல்வதைக் கேளுங்கள்:
 
1. மேற்கிந்தியத் தீவுகளில் கரும்புத் தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் கறும்புச் சாறு இடம் பிடித்துள்ளது. மேலும் கறுப்பு நிறக் கரும்புச் சர்க்கரையை அவர்கள் தினம்தோறும் உட்கொள்கிறார்கள். இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கிறார்.
 
2. கரும்புச் சாற்றில் உள்ள கனிமச் சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது. அதுவுமில்லாமல் கரும்புச் சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது. அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்.
 
3. அதுவுமில்லாமல் உடலில் நோயை உண்டு பண்ணும் அமிலத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை வழங்கிறதாம்.
 
டாக்டர் லூயிஸ்குன், டாக்டர் சிரில்ஸ்காட், டாக்டர் லஸ்ட் என்று நிறைய பேர் இதன் அருமையைச் செல்லியிருக்கிறார்கள்.
 
உடனே கரும்பு ஜூஸ் கடையை நோக்கி ஓடாதீர்கள். நாள்தோறும் 4 டம்ளர் கரும்பு ஜூஸ் குடித்தேன் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள். ரோட்டில் விற்கும் கட்டை கறும்பை முறுக்கி பிழிந்து குடித்துவிட்டால் சத்து சேர்ந்து விடாது. விஷயத்தைச் சொல்லிவிட்டோம். நல்ல கறும்பில்தான் சாறு பிழிந்தார்களா என்று சோதிப்பது உங்கள் வேலை! அதே போல் கறும்புச் சர்க்கரையின் தரம் பார்த்து வாங்குவதும் உங்கள் வேலை! கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது. வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என்ற நினைப்பு நம்மை விட்டு ஒழிய வேண்டும்.
 
நாடு கடத்தப்பட்ட நல்லவற்றை (கரும்புச் சர்க்கரையை) நாம் முதலில் நம் பழக்கத்திற்கு கொண்டு வருவோம்.