இந்தியாவின் டாப் 10 ட்ரெண்டிங் அரசியல்வாதிகள் – 2019

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:27 IST)
இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக சவால்களை எதிர் கொண்ட, அதிகம் ஊடகங்களால், மக்களால் உற்று நோக்கப்பட்ட தேசிய அளவிலான அரசியல்வாதிகளில் முதல் 10 பேர் இவர்கள்தான்..!

10. பினராயி விஜயன்

கேரள மாநிலத்தின் முதல்வரான பினராயி விஜயன் கம்யூனிஸ்ட் கட்சியை (சிபிஎம்) சேர்ந்தவர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது ரயில்களில் தண்ணீர் அனுப்பி உதவியதால் தமிழக மக்களுக்கு இவர் பெயர் கொஞ்சம் அறிமுகமாயிற்று. கடந்த சில மாதங்களுக்கு முன் நக்சல்கள் மேல் இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் சிலர் கொல்லப்பட்டனர். அதனால் இவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாரபட்சமின்றி எதிர்க்கட்சியான காங்கிரஸுடன் இணைந்து போராட்டம் நடத்திய இந்த காம்ரேட் ட்ரெண்டிங்கில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

09. நிர்மலா சீதாராமன்

கடந்த ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு மக்களவை கூட்டத்தின் போதும் பதட்டத்தோடு கவனிக்கப்பட்ட நபர். கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் சர்ச்சைகளாலேயே அதிகளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனார். ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்ததற்கு இவர் சொல்லிய காரணங்கள் நெட்டிசன்களுக்கு மீம் போடுவதற்கு வசதியாகி போயின. சமீபத்தில் வெங்காய விவகாரத்திலும் ”நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை” என்று கூறியதெல்லாம் தொடர்ந்து அவர் ட்ரெண்டிங் ஆக காரணமாக இருந்தன.

08. மம்தா பானர்ஜி

திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ட்ரெண்டிங் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடிக்கிறார். மக்களவை தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கும், திரிணாமூல் காங்கிரஸுக்கும் நடந்த போட்டி தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகின. தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருபவர். மத்திய பாஜக அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வருபவர். பாஜகவினர் சிலர் அவர் சென்ற வாகனத்தை மறைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷ்மிட்டது முதல் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே நடந்த வன்முறை சம்பவங்கள் முதற்கொண்டு இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட நபராக மம்தா இருக்கிறார்.

07. யோகி ஆதித்யநாத்

பாஜக கட்சியை சேர்ந்தவரும் உத்தர பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யாநாத் ஏழாவது இடத்தை பிடிக்கிறார். மக்களின் நலன்களை விடவும் பசுக்களின் நலனில் மிகவும் அக்கறை காட்டுபவர். பசுக்களுக்கென கோசாலைகள், பராமரிப்பற்ற பசுக்களை காக்க சிறப்பு திட்டங்கள், பசுக்களுக்கு குளிராமல் இருக்க சிறப்பு ஸ்வெட்டர்கள் என விலங்குகள் மீது தனி கவனம் செலுத்தினார். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைப்பதற்காக ‘ஆண்டி ரோமியோ ஸ்குவாட்’ என்னும் தனிப்படையை உருவாக்கினார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் கலவரங்கள் ஏற்பட்டு பொது சொத்துக்கள் நாசமாகின. யார் பொது சொத்துக்களை நாசம் செய்தார்களோ அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாசத்திற்கு ஈடு செய்யப்படும் என அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த யோகி ஆதித்யநாத் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

06. ப.சிதம்பரம்

இந்த ஆண்டு முழுவதும் இவர் பேசப்படாவிட்டாலும் பேசப்பட்ட நேரம் மொத்த இந்தியாவும் உற்று நோக்கியது இவரைதான். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் கைதானது மொத்த இந்தியாவும் உற்று நோக்கிய 2019ன் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. கைதான நாள் முதல் ப.சிதம்பரம் நீதிமன்றத்துக்கு அளித்த ஜாமீன் மனுக்கள் கணக்கற்றவை. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் மத்திய அரசின் கொள்கைகள் குறித்த விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஆண்டு முழுவதும் ட்ரெண்ங்கில் இல்லா விட்டாலும் ஒரே நிகழ்வின் மூலம் உடனடியாக பேசப்பட்டவர் என்பதால் அவருக்கு ட்ரெண்டிங்கில் ஆறாவது இடம்.

05. உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த பெயர் இந்தியாவில் எவ்வளவு மக்களுக்கு தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே. சிவசேனா கட்சியின் பிதாமகர் பால் தாக்கரேவின் மகனும், தற்போதைய சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தார். ஆட்சியதிகாரத்தில் உத்தவ் பாதி பங்கு கேட்க பாஜக மறுத்ததால் கூட்டணியிலிருந்து வெளியேறினார். பின்னர் காங்கிரஸ், தே.காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் பாதி கூட தர மறுத்த பாஜகவை பின்னுக்கு தள்ளி மொத்த ஆட்சியையும் பிடித்து மராட்டிய அரசியலை தேசமே உற்றுநோக்கும்படி செய்த உத்தவ் தாக்கரே ட்ரெண்டிங்கில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறார்.

04. ஜெகன் மோகன் ரெட்டி

இவரும் உத்தவ் போலவே ஒரு புதுவரவே. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று முதல்வரானதால் மட்டும் ஜெகன் மோகன் ரெட்டி ட்ரெண்ட் ஆகவில்லை. தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை பல விதங்களில் புறக்கணித்தது முதல் ஆந்திராவுக்கு பல்வேறு புதிய சட்டங்களையும் கொண்டு வந்தார். ஐந்து துணை முதல்வர்கள், மூன்று தலைநகரங்கள், ஆந்திர மக்களுக்கு ஆந்திராவில் 75 சதவீத வேலைவாய்ப்பு, பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்று அடுத்தடுத்து இவர் கொண்டு வந்த சட்டங்கள் மற்றும் திட்டங்களின் பட்டியல் மிக நீளம். இந்த புதிய கட்டுப்பாடுகளால் இவர் பாராட்டப்பட்ட அளவுக்கு விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறார்.

03. நரேந்திர மோடி

2014ல் பிரதமராக ஆன காலம் தொடங்கி ஆண்டு தோறும் ட்ரெண்டிங்கில் முதல் இடம் வகித்து வந்தவர். இந்த முறை பாஜக வெற்றியடைந்து இரண்டாவது முறை தொடர்ந்து பிரதமராக வகித்து வருபவர். இஸ்ரோ சந்திராயன் 2 திட்டத்தில் தோல்வியடைந்தபோது இஸ்ரோ சிவனை கட்டிபிடித்து ஆறுதல் சொன்னது முதல் தமிழ்நாடளவில் இவர் ட்ரெண்டிங் ஆன சம்பவங்கள் நிறைய! முக்கியமாக மாமல்லபுரத்தில் சீன அதிபரின் சந்திப்பு. மாமல்லபுரத்துக்கு தமிழ் பாரம்பரியப்படி வேட்டி அணிந்து வந்ததும், கடற்கரையோரத்தில் கிடந்த குப்பைகளை அகற்றியதும் தேசிய அளவிலும், தமிழக மக்களிடத்திலும் மோடி மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த ஆட்சியில் செய்தது போல பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் எதிலும் சிக்காமல் அமைதியின் பிரதமாராக வலம் வரும் பிரதமர் நரேந்திர மோடி ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடம் பிடிக்கிறார்.

02. ராகுல் காந்தி

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் முடிவு வரை அதிகம் பேசப்பட்ட ஒரு காங்கிரஸ் அடையாளம். மக்களவை தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்காக அயராது உழைத்தவர் தான் வெற்றி பெறுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த பெரும் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தும் தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தவர். தனது தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்து பாஜகவை விமர்சிப்பதை விடவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய வழக்கில் அறிவுரைகளை வழங்கி நீதிமன்றம் விடுவித்தது. மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை ரேப் இன் இந்தியா என இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அதற்கு மன்னிப்பு கேட்க மறுத்து “நான் ராகுல் சாவர்க்கர் அல்ல.. ராகுல் காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன்” என பேசியது வரை அதிகளவில் ட்ரெண்டிங் ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளார் ராகுல் காந்தி.

1. அமித்ஷா
பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் சாணக்கியராக போற்றப்படும் அமித்ஷாதான் இந்த வருடத்தில் அதிகம் ட்ரெண்டிங் ஆன அரசியல் தலைவர். மக்களவை தேர்தலில் பாஜக வென்றதும் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மக்களவை கூட்டமும் பரபரப்பாக உற்று நோக்கப்படுவதற்கு அமித்ஷா அறிவிக்கும் புதிய புதிய சட்டங்களும், திட்டங்களும் கூட ஒரு காரணம். காஷ்மீரின் 370 பிரிவு நீக்கம், முத்தலாக் சட்டம், குடியுரிமை மசோதா என இந்த ஆண்டின் பாதியில் இந்தியா முழுவதும் பரபரப்பாக உற்று நோக்கப்பட்டது. மராட்டியத்திலும், ஜார்கண்டிலும் இவரது வியூகங்கள் பலனளிக்காது போனாலும், இந்த ஆண்டில் பாஜகவினராலேயே அதிகம் முன்னிறுத்தப்பட்ட நபராக அமித்ஷா இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்