பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்களும் அறிகுறிகளும் என்ன...?

Webdunia
மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’என்று சொல்கிறோம்.

வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.
 
50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 
 
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள். புகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம்.
 
முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, உடல் செயலிழத்தல்.
 
பேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல். மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை. எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை உண்டாகும்.
 
நடக்கும்போது தள்ளாடுதல், நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது. பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும். பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.
 
நடந்து செல்லும்போது தலைசுற்றும். உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும். கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது. வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி ஏற்படுதல் போன்றவை.
 
பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்