நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார் கிருஷ்ணன்.
தன் தாயைத்தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான், நரகாசுரன். எந்தத் தாயாவது தன் மகனைக் கொல்லுவாளா? ஆனால், சத்தியபாமாவுக்கோ, நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது. தெரியாதபடி மாயம் செய்து மயக்கியவர் கிருஷ்ணன்.
ஆகவே, கணவனைக் காக்க, தேரோட்டியாகப் போர்க்களத்துக்குச் சென்றிருந்த சத்தியபாமா, தன் வில்லை எடுத்து வளைத்தாள். அடங்காத கோபத்துடன், நரகாசுரனைக் கொன்று வீழ்த்தினாள். உயிர் பிரியும்போது ஞானம் பெற்ற அந்த அரக்கன், ஒரு வரம் கேட்டான்.
”என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்களில் ஒளி ஏற்ற வேண்டும். மக்கள் நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு மகிழ்ச்சியாக இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டான்.
பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் (மூட எண்ணம்) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம்.