அசுரனை அழித்து சொர்க்கமான தெய்வத்தன்மையை பெறுவது தீபாவளி

Webdunia
தீபாவளி திருநாளில் அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும், அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள். நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல்  எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான்.

 
தெய்வத்தன்மையான சுபிட்சம் உள்ள பகுதிகளை சொர்க்கம் என்றும் அசுரத்தன்மையான அமங்கலம் உள்ள பகுதியை நரகம் என்றும் சொல்லலாம். ஒவ்வொருவர் மனதிலும் இந்த இரண்டு தன்மைகளும் உண்டு. வாழ்வின் நோக்கம் தெய்வத்தன்மையைப் பெறுவதுதான். அதாவது மங்களத்தைப் பெறுவதுதான். மங்களத்தைப் பெற அமங்கலங்கள் போக வேண்டும்.
 
நரகமாகிய அமங்கல அசுரனை மாய்த்து சொர்க்கமான தெய்வத்தன்மையைப் பெறும் நோக்கில் கொண்டாடப்படுவதுதான்  தீபாவளி எனலாம். பெரியாழ்வார் கண்ணனை நரக நாசன் என்று போற்றுகிறார். நரகனை நாசம் செய்யும் கண்ணனை தீபம் ஏற்றிக் கொண்டாடுகிறோம். நரகாசுரன் பகவானின் பிள்ளைதான். தன் புதல்வனை, தானே அழிப்பாரா என்ற கேள்வி எழும். உலகில் நல்லதும் கெட்டதும் இறைவனின் படைப்பு. கெட்டது நல்லவற்றை அழிக்க முற்படும்போது பகவான் கெட்டதை அழிக்கிறார். தன் படைப்புதானே என்று பார்க்க மாட்டார்
 
அடுத்து ஒரு கேள்வி. நரகனின் தாய் பூமாதேவி. தாயே தன் குழந்தையை அழிப்பாளா? எல்லா வளங்களும் நமக்குத் தரும்  தாயான பூமியை அழித்தும் இழித்தும் நாசம் செய்யும் மனிதர்கள் பூமியை நரகமாக்கும்போது அந்த நரகத்தைச் செய்யும்  நரகாசுரர்களை பூமியே நாசம் செய்கிறாள். மங்களமாகிய சொர்க்கத்தைத் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் போற்ற  வேண்டும். அமங்கலமாகிய நரகத்தைத் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் அழிக்க வேண்டும். அதற்கான பிரார்த்தனைதான்  தீபாவளிப் பண்டிகை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்