இதுதான் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் லட்சணமா?

Webdunia
புதன், 29 மே 2019 (11:22 IST)
பள்ளிக்கூடம் செல்வதே அறிவை வளர்த்து அறியாமை என்னும் இருளை போக்கி கொள்ளதான். ஆனால் இன்று வேலைக்கு செல்வதற்கு ஒரு பாஸ்போர்ட் போல படிப்பு இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மிகபெரிய அறிவாளி ஆக வேண்டுமென ஆசைப்பட்டே செலவு அதிகம் ஆனாலும் பரவாயில்லை என பெரிய பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

நல்ல கல்வி வேண்டும் என பெற்றோர்கள் விரும்பியதால் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு மாறினர். மாநில பாடத்திட்டத்தில் இருந்து மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்துக்கு மாறினர். அதுவும் இப்போது சரியில்லை என்று மத்திய பாடத்திட்ட பள்ளிகளான சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மாறினர். அடுத்து சர்வதேச பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்புகள் என மாறி கொண்டிருக்கின்றனர். ஆனால் எத்தனை பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் புத்தகத்தில் என்ன இருக்கிறது? அது உண்மையா? இல்லையா? என்பதை ஆராய்கின்றனர் என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் பல மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்சி பள்ளிகளின் கல்வி தரம் எப்படியிருக்கிறது என்பதற்கு சிறிய உதாரணம். ரொம்ப காலத்திற்கு முன்பிலிருந்தே உலா வரும் ஒரு வதந்தி “நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று சனீஸ்வர பகவான் கோவிலுக்கு மேலே செல்லும்போது சில வினாடிகள் அப்படியே நின்றுவிட்டது. அதற்கு காரணம் சனி கிரகத்திலிருந்து சனி பகவான் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான கதிர். அதுதான் செயற்கைக்கோளின் இயக்கத்தை சில வினாடிகள் நிறுத்திவிட்டது. இதைக்கண்டு நாசா விஞ்ஞானிகள் மிரண்டு போய்விட்டனர். பார்த்தீர்களா நம் முன்னோர்களின் மகிமையை” என்ற கட்டுக்கதை. இதுபற்றி பலபேர் பல கட்டுரைகள் எழுதி ஆன்மிக இதழ்களில் வெளியிட்டனர். பலர் யூட்யூப் வீடியோக்கள் வெளியிட்டனர். ஆனால் இதில் ஒன்றுகூட உண்மையில்லை என்பது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டன.

இஸ்ரோவின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் அந்த சமயத்தில் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் “சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே செயற்கைக்கோள் செயலிழந்தது போன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை. மேலும் அதுபோல செயற்கைக்கோள் செயலிழந்து போகிறதா என்ற ஆய்வையும் ஒரு குழு மூலம் மேற்கொண்டோம். அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று கூறினார்.

ஆனால் இந்த கட்டுக்கதையை பாடத்திட்டத்தில் சேர்த்து பாடம் நடத்தி கொண்டிருக்கும் பள்ளிகளை, ஆசிரியர்களை என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. அரசு சாரா தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த பாடபுத்தகம் எந்த பாடத்திட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்டு இங்கே பாடமாக நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. நாம் நம் பிள்ளைகளை அறிவாளியாக வளர்க்கவே லட்சம் லட்சமாக கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம், முட்டாள்கள் ஆக்குவதற்கு அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்