இண்டர்நெட் இல்லாத காலத்திலேயே மெயில் அனுப்பினாராம் மோடி’! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

வெள்ளி, 17 மே 2019 (16:13 IST)
சமீபகாலமாக பிரதமர் மோடி பேசிவரும்  கருத்துகள் சமூக வலைதளங்களில்  கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றன. சமீபத்தில்  டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர்  “பால்கோட் தாக்குதலின்போது விமானங்கள்  மேகத்தினுள் ஒளிந்து சென்றால் எதிரிகளின்  ராடாரால் கண்டுபிடிக்க முடியாது என  யோசனை சொன்னது நான்தான்” என்று  பேசினார். மேகத்தினுள் செல்வதால் ரேடாரால்  கண்டுபிடிக்க முடியாது என்பதெல்லம் பொய்  என்று பலரும் அவரை விமர்சித்தார்கள்.
தற்போது, ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த பிரதமர் மோடி “1987  காலகட்டத்தில் இந்தியாவில் டிஜிட்டல் கேமரா  மற்றும் இ-மெயில் சேவையை பயன்படுத்திய  வெகுசிலரில் நானும் ஒருவன். அப்போது ஒரு  பேரணியில் அத்வானி கலந்து கொண்டபோது  அவரை நான் எனது டிஜிட்டல் கேமராவில்  படம் பிடித்து, அதை டில்லிக்கு அனுப்பினேன்.  மறுநாளே வெளியான அந்த புகைப்படத்தை  கண்டு அத்வானியே ஆச்சரியப்பட்டார்” என  கூறியுள்ளார்.
 
பிரதமரின் இந்த பேச்சு இணையத்தில் வைரல்  ஆனது. பிரதமர் மோடியால் மட்டும்தான்  இ-மெயில் அறிமுகமாவதற்கு 7 ஆண்டுகளுக்கு  முன்பே அதை பயன்படுத்தமுடியும் என்று  நெட்டிசன்களின் கிண்டல் கனைகள்  தொடர்ந்தன.
 
இந்நிலையில் இந்தியாவிற்கு முதன் முதலாக  இணையத்தை அறிமுகம் செய்துவைத்த  விதிஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின்  முன்னாள் தலைவர் பி.கே.சிங்கால்  “1987ல்  பிரதமர் இ-மெயிலை பயன்படுத்தியிருக்க  வாய்ப்பில்லை. 1995க்கு முன்னர்வரை ERNET  வசதிதான் இருந்தது. அதுவும் முக்கியமான  ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு  மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அதை  மோடியால் நிச்சயம் பயன்படுத்தி இருக்க  முடியாது” என அவர் தெரிவித்தார்.
 
ஒருபக்கம் 1987ல் டிஜிட்டல் கேமரா இருந்ததா?  என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி  எழுப்பப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்