ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விராட் கோலி அடித்த சதம் தற்போது வைரலாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளுமே நூற்றி சொச்சம் ரன்களுக்குள் அவுட் ஆகி மோசமாக விளையாடினாலு, இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய அணியின் பேட்டிங்கால் பரபரப்பாகியுள்ளது.
முக்கியமாக ஜெய்ஸ்வால் அடித்த 161 ரன்களும், விராட் கோலியின் 100 ரன்களும், கே எல் ராகுலின் 77 ரன்களும், நிதிஷ்குமாரின் அதிவேக 38 ரன்களும் (27 பந்துகளில்) இந்தியாவின் ஆட்டத்தையே மாற்றியுள்ளது. தற்போது 487 ரன்களை குவித்துள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 522 என்ற இமாலய டார்கெட்டை வைத்துள்ளது.
இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார் என போட்டிகள் தொடங்கும் முன்பிருந்தே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடர்ந்து பேசி வந்தன. ஆனால் முதல் இன்னிங்ஸில் கோலி 5 ரன்களில் அவுட்டானது அதிர்ச்சியை தந்தது. ஆனால் அனைத்திற்கும் திருப்பி கொடுக்கும் விதமாக இன்று ஒரு சதத்தை வீழ்த்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் 30வது சதம் இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பரில் அடித்த சதத்திற்கு பிறகு சர்வதேச சதத்தை ஒரு ஆண்டு கால இடைவெளியில் கோலி அடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்கள் தரவரிசையில் சச்சினையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் 6 சதங்கள் அடித்ததை ஏற்கனவே சமன் செய்திருந்த விராட் கோலி, இன்று தனது 7வது சதத்தின் மூலம் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
Edit by Prasanth.K