தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

Senthil Velan
திங்கள், 1 ஜூலை 2024 (18:07 IST)
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டி தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
 
இதையடுத்து டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28ம் தேதி துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சஃபாலி வர்மா இரட்டை சதமும் ஸ்மிருதி மந்தனா சதமும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆனுக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 373 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. 
 
37 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி இன்று 2வது இன்னிங்ஸை துவங்கியது.  9.2 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ALSO READ: வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

சதீஷ் சுபா 13 ரன்களும், சஃபாலி வர்மா 24 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி  சென்னையில் வருகிற 5ம் தேதி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்