சமீபத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் கோஹ்லி அபாரமாக விளையாடினார். அதை தொடர்ந்து பாகிஸ்தான் இளைஞர்கள் சிலர் “காஷ்மீர் வேண்டாம்.. கோஹ்லியை கொடுங்கள்” என்ற வாசகம் தாங்கிய பேனர் ஒன்றை பிடித்து கொண்டு நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஆனால் அது போட்டோஷாப் செய்யப்பட்டது என்று தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. 2016 அன்று ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பின் கமாண்டர் ஒருவர் இறந்த போது அந்த அமைப்பின் இளைஞர்கள் சிலர் “எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்கிற அர்த்தம் பொதிந்த பேனர்களை ஏந்தி போராடினர். அது சில நாளேடுகளிலும் வெளியானது. அந்த புகைப்படத்தை எடுத்து மாற்றி யாரோ இப்படி செய்துள்ளார்கள்.
ஏற்கனவே இதற்கு முன்னால் வேறு சில கிரிக்கெட் ஆட்டங்களின்போதும் இது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.