இந்தியா அணி வரலாற்று சிறப்புமிக்க போட்டித்தொடரை ஆஸ்திரேலியாவில் வென்று, கோப்பையைப் பெற்றுள்ளது. இப்போது இந்த கோப்பை விவகாரத்தில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட சுற்றுப்பயணமாக மூன்று மாதங்கள் சென்று அங்கு டெஸ்ட், மற்றும் ஒருநாள் போடிகளில் வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற ஒரே இந்தியக் கேப்டன் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற தோனிக்கு பரிசுப்பொருளாக 500 டாலர் காசோலைகள் வழங்கப்பட்டன. ஆனால் தொடரை வென்ற இந்திய அணிக்கு கோப்பை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை. இந்த விஷயம் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இதுகுறித்து கூறும் போது ’ தொடரை வென்ற இந்திய அணிக்கு வெறும் டிராபி மட்டுமே என்பது வேதனை அளிக்கிறது. ஆஸ்திரேலியக் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் ஏகப்பட்ட லாபம் சம்பாதிக்கின்றனர். இப்படியிருக்கையில் இந்திய அணிக்கு ரொக்கப் பரிசு அளித்தால் என்ன? வீரர்களால்தானே அவர்கள் லாபம் சம்பாதிக்கின்றனர் ?.. டென்னிஸ் போட்டிகளில் அளிக்கப்படும் பரிசுகளைப் பாருங்கள்.அவர்கள் வீரர்களை மதித்து மிகப்பெரிய தொகையைப் பரிசாக அளிக்கிறார்கள். வீரர்கள்தான் வருவாயை உருவாக்குகின்றனர், ஆகவே அவர்களுக்கும் கொஞ்சம் தாராளமாகக் கொடுக்க வேண்டும்’ எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.