திடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (15:29 IST)
பரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாமல் பாலுறவு கொண்டுவிட்டு, பின்னர் அதற்காக தவறு செய்துவிட்டதாக வருந்தும் போக்கு இளம்பெண்களிடையே குறைந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.



ஓர் இரவு மட்டுமே நீடிக்கும் பாலுறவுக்கான நட்பு குறித்து ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக குற்ற உணர்வு இருந்ததாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

நார்வே நாட்டின் என்.டி.என்.யு பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 547 நார்வே பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் 216 அமெரிக்க பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பலருடன் பாலுறவு கொள்ளும் வழக்கம் உள்ள 30 வயதுக்கு உட்பட்டோரிடம் பாலுறவு குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஆண் ஒருவருடன் பாலுறவு கொண்டபின் அந்த உறவு சிறப்பாக அமைந்துவிட்டால் அதனால் ஏற்படும் வருத்தம் கொஞ்சம்தான் என அந்த ஆய்வில் கலந்துகொண்ட இளம்பெண்கள் கூறினர்.


இதுபோன்ற நேரங்களில் ஆண்களால் திருப்தி கிடைத்துவிட்டதாக உணரும்பட்சத்தில் பெண்கள் வருந்துவது மேலும் குறைவாகவே உள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

இதற்கு முந்தைய ஆய்வுகள் அதிக பரீட்சயமற்றவர்களுடன் கொள்ளும் பாலுறவு குறித்து ஆண்கள் அதிக கவலையற்றவர்களாக இருந்ததாகக் கூறின. இந்த ஆய்வில் முதல் நகர்வை ஆண்களே எடுத்திருந்தாலும் அந்தப் பாலுறவு குறித்து பெண்கள் அதிகம் கவலைகொள்வதில்லை என்று தெரியவந்துள்ளது.


பாலுறவுக்கான நகர்வுகளைத் தொடங்கும் பெண்களுக்கு பொதுவாக இரு தனிப்பட்ட குணங்கள் உள்ளதாக கூறுகிறார் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பஸ்.

"முதலில், இது போன்ற பெண்களுக்கு ஆரோக்கியமான பாலியல் மன நிலை இருக்கும்."

"இரண்டாவதாக, அந்தப் பெண்களுக்கு யாருடன் உறவுகொள்ள வேண்டும் என்பதற்கான பல தேர்வுகள் இருக்கும். அவர்களே அவர்களுக்கான தேர்வைச் செய்ததால் அது குறித்து அவர்கள் கவலைப்படுவதற்கு மிகவும் குறைவான காரணங்களே இருக்கும்."

பாலுறவு செயல்பாடுகளில் பெண்கள் தாங்களாகேவே சுதந்திரமாக எடுக்கும் முடிவுகளின் முக்கியத்துவத்தை ஆய்வு முடிவுகள் விளக்குவதாக கூறுகிறார் டெக்சாஸ் பல்கலை பேராசிரியர் ஜாய் பி.வைகாஃப்.பாலுறவின் போதான நிகழ்வுகளை பெண்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது வருத்த உணர்வு ஏற்படாமல் இருக்க உதவுவதாக கூறுகிறார் வைகாஃப்.

பாலுறவு சிறப்பாக இருக்கும்பட்சத்தில் வருத்த எண்ணங்கள் குறைவாக இருப்பது ஆண், பெண் இரு தரப்புக்கும் பொதுவானதாக இருப்பதாகவும் உயிரியல் அமைப்பே இதற்கு காரணம் என்றும் கூறுகிறார் என்.டி.என்.யு பல்கலைக்கழக உளவியல் துறை இணை பேராசிரியர் மான்ஸ் பெண்டிக்ஸன்.பாலுறவிற்கு பிந்தைய வருத்த உணர்விற்கு அச்சமயத்தில் ஏற்படும் வெறுப்புணர்வும் ஒரு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பாலுறவின்போது ஏற்படும் அந்த வெறுப்புணர்வு பிற்காலத்தில் அந்த உறவை தவிர்க்க சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்கிறார் பேராசிரியர் பஸ்.

குறிப்பாக ஓர் ஆணுக்கு பாலியல் நோய் இருப்பின் அவருடனான உறவை தவிர்க்க பெண்களுக்கு இதுபோன்ற வெறுப்புணர்வு நல்ல காரணமாக இருக்கும் என்கிறார் பஸ்.

பரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாத பாலுறவு கொள்ளும் வழக்கம் அமெரிக்க இளைஞர்களைவிடவும் நார்வே நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிகம் உள்ளதாகவும், அதை எண்ணி அவர்கள் வருந்துவதற்கான காரணங்கள் குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்