சீன பொருளாதாரம் சரிவை சந்திப்பது ஏன்? ஐந்து காரணங்கள்

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (20:50 IST)
கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உலகச் சந்தைத் தேவையில் ஏற்பட்ட நலிவு ஆகியவற்றால், சீன பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

 
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான சீனாவின் அதிகாரபூர்வ காலாண்டு வளர்ச்சி தரவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனா இன்னும் சரிவை சந்தித்தால், அந்நாடு பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சீனா நிர்ணயித்துள்ள 5.5% என்ற ஆண்டு வளர்ச்சி விகித இலக்கை எட்ட முடியாத நிலையில், அரசு அதிகாரிகள் இந்த இலக்கை அடைவதற்கான தேவையை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஏப்ரல் - ஜூன் காலாண்டு வளர்ச்சியில் சீனா மயிரிழையில் சரிவிலிருந்து தப்பித்தது. ஆனால், இந்த ஆண்டு சில பொருளாதார நிபுணர்கள் எவ்வித வளர்ச்சியையும் எதிர்பார்க்கவில்லை.
 
 
அமெரிக்கா மற்றும் பிரிட்டனை போன்று சீனா பெரிய அளவிலான பணவீக்கத்தை எதிர்கொள்ளவில்லை என்றாலும், அந்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான வாடிக்கையாளர்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் திடீரென குறைந்து வருவது உள்ளிட்ட மற்ற பிரச்னைகள் சீனாவுக்கு உள்ளன. சீனாவுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் இடையிலான வணிக அழுத்தங்களும் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளன.
 
 
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் யுவான் மதிப்பு பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மோசமான சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதால் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை அதிகரித்துள்ளது. மேலும், இதனால் மத்திய வங்கியிலிருந்து பணத்தை பொருளாதார வளர்ச்சிக்காக செலவிடுவதும் கடினமாகியுள்ளது.
 
முன்மாதிரியே இல்லாத வகையில், அக்டோபர் 16ம் தேதி தொடங்கப்படவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தொடர ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சமயத்தில், சீன பொருளாதாரம் சரிவை சந்தித்துவருகிறது.
 
 
தயாரிப்பு மையங்களாக உள்ள ஷென்ஸென் மற்றும் டியான்ஜின் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, பொருளாதாரச் செயல்பாடுகள் பல்வேறு தொழில்களில் பாதிப்பை சந்தித்தன.
 
மேலும், உணவு மற்றும் பானங்கள், சில்லறை விற்பனை, சுற்றுலா உள்ளிட்டவற்றில் மக்கள் பணம் செலவழிக்கவில்லை, இதனால் முக்கியமான சேவைகள் அழுத்தத்திற்கு உள்ளாகின.
 
உற்பத்தியைப் பொறுத்தவரையில், செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலைகள் இயங்குவது வேகமெடுத்ததாக, தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
 
உள்கட்டுமானம் மீது அரசு அதிகம் செலவழிப்பதாலேயே உற்பத்தி மீண்டும் எழுச்சியை சந்தித்து வருகிறது.
 
 
ஆனால், உற்பத்தி பெருகாத இரண்டு மாதங்களுக்குப் பின் இது நிகழ்ந்துள்ளது. மேலும், உற்பத்தி பொருட்களின் தேவை, புதிய ஆர்டர்கள், வேலைவாய்ப்பு ஆகியவை பாதிப்படைந்துள்ளதால், தொழிற்சாலை செயல்பாடுகள் செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தனியார் புள்ளிவிவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
 
அதிக வட்டி விகிதம், பணவீக்கம் மற்றும் யுக்ரேன் போர் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் உற்பத்தி தேவை குறைந்துள்ளது.
 
 
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சீனா இன்னும் பலவற்றை செய்ய முடியும் என நிபுணர்கள் ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும், ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகள் முடியும் வரை அவை செய்ய முடியாதவையாக உள்ளன.

 
"தொழில்களை பெருக்காமலோ அல்லது மக்கள் பணத்தை செலவழிக்காமலோ இருக்கும்வரை, மத்திய வங்கியிலிருந்து பொருளாதாரத்திற்காக பணத்தை செலவிடுவதில் எந்த பொருளும் இல்லை," என, எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸின் தலைமை ஆசிய பொருளாதார நிபுணர் லூயிஸ் குயிஜ்ஸ் கூறுகிறார்.

 
2. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சீன அரசு
 
 
சிறு தொழில்கள், உள்கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றை ஊக்குவிக்க சீன அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 டிரில்லியன் யுவான் மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை அறிவித்தது.
 
ஆனால், வளர்ச்சி இலக்குகளை சந்திக்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் செலவினங்களை அதிகரிப்பதற்கும் அதிகாரிகள் இன்னும் பலவற்றை செய்திருக்க முடியும்.

 
இவற்றுள் உள்கட்டுமானத்தில் அதிகம் முதலீடு செய்தல், வீடு வாங்குவோர், ரியல் எஸ்டேட் செய்வோர், உள்ளூர் அரசாங்கங்கள் கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துதல், வரிச்சலுகைகள் உள்ளிட்டவை அடங்கும்.

 
"பொருளாதார நலிவை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் செயல்பாடுகள், நாடு முன்பு பொருளாதார நலிவை சந்தித்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில் மிதமானவையாகவே உள்ளன," என, குயிஜ்ஸ் கூறுகிறார்.
 
 
3. நெருக்கடியில் சீன ரியல் எஸ்டேட் சந்தை
 
ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்டுள்ள நலிவு மற்றும் வீட்டுச்சந்தையில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான உணர்வு ஆகியவை சந்தேகத்துக்கிடமின்றி வளர்ச்சியை குறைத்துள்ளது.
 
இது பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது, ஏனெனில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.
 
"வீட்டுச்சந்தை மீதான நம்பிக்கை பலவீனமாகும்போது, ஒட்டுமொத்த பொருளாதார சூழல் குறித்தும் மக்கள் நிச்சயமற்றதாக உணர்வார்கள்," என, குயிஜ்ஸ் கூறுகிறார்.
 
முழுதும் கட்டி முடிக்கப்படாத கட்டிடங்கள் மீது அடமானம் செலுத்த வீடு வாங்குவோர் மறுக்கின்றனர், தங்கள் வீடுகள் எப்போதும் கட்டி முடிக்கப்படாதோ என்று சிலர் சந்தேகம் கொள்கின்றனர். புதிய வீடுகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், கட்டுமானத்திற்கு பயன்படும் பொருட்கள் மீதான இறக்குமதிக்கான தேவை குறைந்துள்ளது.
 
ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்க சீன அரசு முயற்சிகள் மேற்கொண்ட நிலையிலும், 10க்கும் மேற்பட்ட நகரங்களில் வீடுகளின் விலைகள் இந்தாண்டு 20 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.
 
ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் அழுத்தத்தைச் சந்தித்துள்ள நிலையில், அச்சந்தையில் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த அதிகாரிகள் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
 
 
சீனாவின் தொழில்துறையில் தீவிர காலநிலை நிகழ்வுகள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
 
 
ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு மாகாணமான சிஷுவான் மற்றும் மத்திய பகுதியில் உள்ள சாங்கிங் ஆகிய பகுதிகளில் தீவிரமான வெப்ப அலைகள், அதனைத் தொடர்ந்து வறட்சி ஆகியவை தாக்கியது.
 
 
இதனால், ஏசிகளுக்கான தேவை அதிகரித்த நிலையில், நீர் மின்திட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நம்பியிருக்கும் அப்பகுதிகளில் மின் தேவையை அதிகரித்தது.
 
இதனால் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகளான ஐபோன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தி நேரத்தை குறைப்பதற்கோ அல்லது ஒட்டுமொத்தமாக உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கோ தள்ளப்பட்டன.

 
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தித் தொழிலில் மட்டும் 80 சதவீதத்திற்கும் மேல் லாபம் சரிந்ததாக, சீனாவின் புள்ளிவிவர அலுவலகம் ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது.

 
இதைத்தொடர்ந்து எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளை காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களுடன் அரசு மீட்பு நடவடிக்கையை எடுத்தது.
 
 
5. முதலீட்டாளர்களை இழக்கும் சீனாவின் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள்

 
சீனாவின் தொழில்நுட்ப பெருநிறுவனங்களை ஒழுங்குபடுத்த மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளாக நீடித்தும் எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை.

 
டென்சென்ட் மற்றும் அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்கள் சமீப காலாண்டில் வருவாயில் முதன்முறையாக இழப்பைச் சந்தித்தது. டென்சென்ட் நிறுவம் 50 சதவீத வருவாயையும் அதேபோன்று அலிபாபா நிறுவனம் மொத்த வருவாயில் பாதியையும் இழக்க நேர்ந்தது.
 
 
பல ஆயிரக்கணக்கிலான இளம் பணியாளர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். 16 முதல் 24 வயதுக்குட்படோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருக்கும் நிலையில் நெருக்கடி ஏற்பட்டது. இது சீனாவின் உற்பத்தியையும் வளர்ச்சியையும் நீண்ட காலத்திற்கு பாதிக்கச் செய்யும்.
 
 
இந்த மாற்றத்தை முதலீட்டாளர்களும் உணர்ந்துள்ளனர். ஷி ஜின்பிங்கின் அதிகாரம் வளர வளர சீனாவில் பெரும் வெற்றிபெற்ற சில தனியார் நிறுவனங்கள் அதிக கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்படுகின்றன.
 
 
அரசு நிறுவனங்களுக்கு ஆதரவான நிலை உள்ளது போல் தோன்றுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பின்வாங்குகின்றனர்.
 
 
அலிபாபா நிறுவனத்திலிருந்து ஜப்பானின் சாஃப்ட்பேங்க் பெருமளவிலான முதலீட்டுப் பணத்தை திருப்பி எடுத்துக்கொண்டது. மேலும், வாரென் பஃபெட்டின் ஹாத்அவே நிறுவனம், மின்வாகன தயாரிப்பு நிறுவனமான பி.ஒய்.டி-யில் தன் பங்குகளை விற்கிறது. இந்தாண்டின் இரண்டாம் பாதியில் மட்டும் டென்சென்ட் நிறுவனம் 7 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளது.

 
மேலும், அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
 
"சில முதலீட்டு முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, மேலும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்ற நாடுகளில் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது," என, எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ், தன் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
சீனா முன்பிருந்ததைபோல இனி தொழில்களுக்கான முக்கிய இடமாக இருக்காது என்பதற்கு உலகம் பழகிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்திய தசாப்தங்களில் சீனாவை வலுப்படுத்திய பொருளாதார வெற்றியை ஷி ஜின்பிங் பணயம் வைக்கிறார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்