வாம்பயர்: 'ரத்தக் காட்டேரி' குறித்த கதைகளும் அறிவியல் விளக்கமும்

Prasanth Karthick
புதன், 12 ஜூன் 2024 (19:07 IST)
உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் வாம்பயர்(Vampire) எனப்படும் ரத்தக் காட்டேரி பற்றிய துணுக்கு கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற விநோத சம்பவங்கள் பற்றி தகவல் பரவியபோது, மேற்கு ஐரோப்பாவில் 'வாம்பயர்' என்ற சொல் பிரபலமடைந்தது.



செர்பியாவில் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட மக்கள் மர்மமான முறையில் இறக்கத் தொடங்கினர். பக்கத்து வீட்டில் இறந்து போன நபர்களால் அவர்கள் அனைவரும் வேட்டையாடப்பட்டதாகவும், அவர்கள் இறப்பதற்கு சற்று முன்பு மூச்சுத் திணறல், வேகமாக மூச்சுவிடுவது போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக செர்பியாவின் தெற்கில் உள்ள மெட்வெட்ஜா மற்றும் வடகிழக்கில் உள்ள கிசில்ஜெவோ ஆகிய இரண்டு சிறிய கிராமங்கள் இந்த வதந்திகளின் மையங்களாக இருந்தன. இந்த கிராமங்கள் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தன. ஆனால் பத்தாண்டுகளில் ஒரே மாதிரியான வினோதமான சம்பவங்கள் இரண்டு கிராமங்களிலும் பதிவாகின.

இந்த விஷயம் மக்கள் மத்தியில் பரவியது. அதன் விளைவாக இந்த வினோத மரணங்களுக்கு என்ன காரணம் என்று விசாரிக்க ஆஸ்திரிய மருத்துவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கண்டறிந்த அனைத்து தகவல்களைப் பற்றியும் விரிவான அறிக்கைகளைத் தொகுத்தனர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் ஆஸ்திரிய பத்திரிகைகளுக்கு கிடைத்தது. பின்னர் கல்வி வட்டங்களிலும் சென்றடைந்தது.
ஜெர்மன் வரலாற்றாசிரியர் தாமஸ் எம். போன், ‘வாம்பயர்ஸ்: தி ஆரிஜின் ஆஃப் தி ஐரோப்பியன் மித்’ என்னும் புத்தகத்தை எழுதியவர் ஆவார். அவர் காட்டேரி என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதை பற்றி குறிப்பிடுகையில், 1725ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாளிதழான ‘வீனெரிஷ்ஸ் டயரியம்’ (Wienerisches Diarium) இல் ‘ரத்தக் காட்டேரி’ (Vampires) என்ற வார்த்தை முதன்முதலில் தோன்றியது என்று கூறுகிறார்.

ரத்தக் காட்டேரி என்பது ஒரு பழங்கால புராண உயிரினம் என்றும், அது உயிருள்ளவர்களின் ரத்தத்தைக் குடித்து அதன் மூலம் உயிர்வாழ்வதாகவும் சிலர் நம்பினார்கள்.

பிசாசின் வேலை’

1725இல், கிசில்ஜெவோவில் (Kisiljevo), இரண்டு நாட்களில் ஒன்பது பேர் இறந்தனர். அவர்கள் அனைவரும் இறப்பதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி பேசியதாகக் கூறப்படுகிறது.

பீட்டர் பிளாகோஜெவிக் என்று அழைக்கப்படும் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டார். ஆனால் அவர்களின் கனவில் தோன்றி அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வைத்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

பதிலுக்கு, உள்ளூர்வாசிகள் பிளாகோஜெவிக்கின் கல்லறையைத் திறந்து, நன்கு பாதுகாக்கப்பட்ட சடலத்தைக் கண்டுபிடித்தனர். அது பிசாசின் அழிக்கும் தொழிலின் ஆதாரமாகக் கருதினார்கள்.

"அந்த சடலத்தின் முகம், கைகள் மற்றும் கால்கள் உட்பட முழு உடலும் மிகவும் பத்திரமாக அடக்கம் செய்யப்பட்டிருந்தது. உயிருடன் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது" என்று சடலத்தை தோண்டியெடுத்த சமயத்தில் அங்கிருந்த ஒரு ஆஸ்திரிய அதிகாரி பகிர்ந்துள்ளார்.

"அந்த சடலத்தின் வாயில், நான் புதிய ரத்தத்தைக் கண்டேன், அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பொதுவான நம்பிக்கையின்படி, அவர் கொன்றவர்களிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சியதால் அவரது வாய் பகுதியில் ரத்தம் இருக்கிறது என்று பேசப்பட்டது", என்றார்.

அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் கிளெமென்ஸ் ரத்னர், "ஆஸ்திரிய மருத்துவர்கள் கல்லறைகளைத் திறந்து, உள்ளூர் மொழிபெயர்ப்பாளர்களிடம் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளப் பேசியபோது 'ரத்தக் காட்டேரி' என்ற வார்த்தை தோன்றியிருக்கலாம்” என்று நம்புகிறார்.

"பொதுவாக பேய்களை ஸ்லோவேனிய வார்த்தையான 'upir' என்று மொழிபெயர்ப்பாளர் முணுமுணுத்திருக்கலாம், அதனை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு , 'Vampire' என்ற வார்த்தை உருவாகியுள்ளது," என்று அவர் கூறுகிறார்.

"தங்களை 'அறிவொளி பெற்றவர்கள்' என்று நினைத்த ஆஸ்திரிய அதிகாரிகளுக்கும், ஆஸ்திரியர்களால் 'பழமையானவர்கள்' என்று கருதப்பட்ட உள்ளூர் கிராமவாசிகளுக்கும் இடையிலான காலனித்துவ சந்திப்பின் மூலம், ஒரு புதிய உயிரினம் தோன்றி உள்ளது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

பீட்டர் கொலை செய்வதை தடுப்பதற்காக, கிராமவாசிகள் அவரது நெஞ்சு பகுதியில் பெரிய கட்டையை சொருகி, அவரது சடலத்தை எரித்து, கிராமத்தில் நிலவிய ரத்தக் காட்டேரி பற்றிய பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த சம்பவங்கள் பலரின் கவனத்தை ஈர்த்த போதிலும், பேராசிரியர் போன் கூற்றுப்படி, பரந்த அளவிலான மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ‘vampirism’ என்னும் நிலை ஏற்படவில்லை. ‘Vampirism’ என்பது ரத்தக் காட்டேரிகள் மீதான நம்பிக்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ரத்தக் காட்டேரியா அல்லது பலிகடாவா?



ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 1732-இல், மெட்வெட்ஜா கிராமம் பயத்தால் ஆட்கொண்டது.

அங்கு மூன்று மாதங்களுக்குள் 17 பேர் இறந்தனர், அவர்களில் சிலர் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தவர்கள். மர்மமான முறையில் அவர்கள் இறந்துபோனது மக்களின் பயத்தை அதிகரித்தது.

கிசில்ஜெவோவில் நடந்த சம்பவங்களைப் போலவே, இறந்தவர்களில் சிலர் மரணத்திற்கு முன் மூச்சுத் திணறல் மற்றும் கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் கூறினர்.

கல்லறைகளைத் தோண்டி எடுப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, டாக்டர் ஜோஹன்னஸ் ஃப்ளூக்கிங்கர் ஒரு அறிக்கையை பதிவு செய்தார். அதில், போராளி ஒருவரை 'ரத்தக் காட்டேரி' வழக்குகளின் ஒரு பிரதான குற்றவாளியாக அவர் குறிப்பிட்டார்.

அவரது சடலம் இன்னும் சிதைவடையாமல் இருந்ததாகவும், அவரது கண்கள், மூக்கு, வாய் மற்றும் காதுகளில் இருந்து புதிய ரத்தம் வழிந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்தான் உண்மையில் ரத்தக் காட்டேரி என்பதற்கு மெட்வேஜா மக்கள் அளித்த தகவல்கள் சான்றாகக் கருதப்பட்டது. பீட்டர் என்பவரின் சடலத்துக்கு செய்ததை போலவே, அவர்கள் இந்த நபரின் இதயத்தில் ஒரு கட்டையை சொருகி பின்னர் உடலை எரித்தனர்.

"உயரமாக பகுதியில் இருந்து விழுந்து இறந்த இந்த மனிதனின் வாழ்க்கை மற்றும் விதியைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் கிராமவாசிகள் அவரை பலிகடாவாக மாற்றினர்" என்று தாமஸ் போன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அந்த நபர், கொசோவோவிலிருந்து வந்த அல்பேனியா நாட்டை சேர்ந்த அர்னாட் பாவ்லே என கண்டறியப்பட்டது.

"கிசில்ஜெவோவில் உள்ள பீட்டர் பிளாகோஜெவிக் மற்றும் மெட்வெஜாவில் உள்ள அர்னாட் பாவ்லே வாம்பயர் இனத்தின் முதல் அறியப்பட்ட பிரதிநிதிகள்" என்று அவர் கூறுகிறார்.

அறிவியல் பூர்வமான விளக்கம்

சிதைவடையாத உடல்களைக் கண்டு கிராம மக்கள் பயந்தது உண்மை தான். ஆனால் இறந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை அசாதாரணமானது அல்ல என்று தற்கால நோயியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"பிரபல வியன்னா நோயியல் நிபுணரான கிறிஸ்டியன் ரைட்டர் என்பவர் இந்த எல்லா இறப்பு நிகழ்வுகளுக்கும் பின்னால் ஆந்த்ராக்ஸ் என்ற தொற்றுநோய் இருந்திருக்கும் என்று நினைக்கிறார். கடந்த காலங்களில் போர்களின் போதும் அதற்குப் பின்னரும் இந்த நோய் தொற்று காணப்பட்டது" என்று பேராசிரியர் ரத்னர் கூறுகிறார்.

'ஆந்த்ராக்ஸ்’ என்பது பாக்டீரியாவால் ஏற்படும் நோயாகும், இது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அதன் பின்னர், பெரும்பாலும் மரணத்தை விளைவிக்கிறது.

இறப்பதற்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சொல்வது, நிமோனியாவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் ரத்னர் நம்புகிறார்.

"நீங்கள் அந்த செய்தி அறிக்கைகளை கவனமாகப் படித்தால், ரத்தக் காட்டேரிகளை யாரும் தங்கள் கண்களால் பார்க்கவில்லை என்பது புரியும். அவர்கள் ரத்தத்தை உறிஞ்சினார்கள் என்பது ஆஸ்திரிய மருத்துவர்கள் கொடுத்த விளக்கம்”, என்று அவர் கூறுகிறார்.

ரத்தம் உறிஞ்சுவது மேற்கத்திய மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று தாமஸ் போன் கருதுகிறார்.

மெட்வெட்ஜாவைச் சேர்ந்த உள்ளூர் வரலாற்றாசிரியர் இவான் நெசிக் கருத்துப்படி, இன்னமும் ரத்தக் காட்டேரிகளின் மீதான நம்பிக்கையும் பயமும் தொடர்கிறது என்கிறார்.
பீட்டர் பிளாகோஜெவிக் மற்றும் அர்னாட் பாவ்லே இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட, உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளை ரத்தக் காட்டேரிகள் இடமிருந்து பாதுகாக்க நினைக்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"செர்பிய வாம்பயர் என்பது ரத்தத்தால் நிரப்பப்பட்ட தோலின் குமிழியை ஒத்திருப்பதாக நம்பப்படுகிறது" என்றும் அவர் கூறுகிறார்.

“அதன் உடலில் எங்கேனும் துளையிட்டால் பலூனைப் போல சுருங்கி விடும் என்றும் கருதப்படுகிறது. எனவே மக்கள் பாதுகாப்புக்காக வாயில்கள், ஜன்னல்கள் அல்லது கதவுகளில் முட்களை வைக்கின்றனர்.”, என்கிறார்.

துருக்கிய அச்சுறுத்தலுக்கு மாற்று

கிசில்ஜெவோ மற்றும் மெட்வெட்ஜா ஆகிய இரண்டு கிராமங்களும் பல நூற்றாண்டுகளாக ஓட்டோமான் பேரரசின் ஆட்சிக்குப் பிறகு, 1700களில் ஹப்ஸ்பர்க் முடியாட்சியின் அதிகாரத்தின் கீழ் வந்த எல்லைப் பகுதிகளில் அமைந்திருந்தன.

இந்த சம்பவங்கள் சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் நிகழ்ந்ததால் ரத்தக் காட்டேரிகளின் தோற்றம் கவனத்தை ஈர்த்தது என்று பேராசிரியர் ரத்னர் நம்புகிறார்.

"உஸ்மானியப் பேரரசுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பெரும் மோதல் இந்த நிகழ்வுகளின் முக்கிய பின்னணியாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

1683இல் வியன்னாவின் ஓட்டோமான் இரண்டாவது முற்றுகைக்குப் பிறகு, ரத்தக் காட்டேரிகள் கிறிஸ்தவ மதத்துக்கு ஏற்பட்ட 'துருக்கிய அச்சுறுத்தலுக்கு' மாற்றாக இருந்ததையும் பேராசிரியர் போன் சுட்டிக்காட்டுகிறார்.

18ஆம் நூற்றாண்டின் மத்தியில், ஹப்ஸ்பர்க் முடியாட்சியில் 'ரத்தக் காட்டேரி' பற்றிய ஒரு புதிய அலை தோன்றியது, ஆனால் கற்பனையான இந்த உயிரினங்களுக்கு எதிரான அனைத்து போராட்டங்களும் மூடநம்பிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் `ரத்தக் காட்டேரிகள்’ பற்றிய நம்பிக்கைகள் வேறு வடிவத்தில் விரைவில் உயிர்த்தெழுந்தன.

“சிவப்பு முகம் கொண்ட செர்பிய கிராமவாசிகள் போல் இல்லாமல், நவீன கற்பனை ரத்தக் காட்டேரிகள் அழகாகவும், வெளிர் நிறமுள்ள உயர்குடியினராக இருந்தனர்" என்று ரத்னர் கூறுகிறார்.

நவீன புனைகதைகளின் அழகான மற்றும் அதிநவீன ரத்தக் காட்டேரி 1819இல் ஆங்கில எழுத்தாளர் ஜான் பாலிடோரியின் ‘தி வாம்பயர்’ கதை வெளியீட்டுக்கு பின்னர் உருவானது.
பிராம் ஸ்டோக்கரின் 1897ஆம் ஆண்டு வெளியான நாவலான `டிராகுலா’ மிகச்சிறந்த வாம்பயர் நாவலாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் நவீன ரத்த காட்டேரிகள் குறித்த கதைகளின் அடிப்படையாகவும் அதுதான் இன்றுவரை இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்