அண்ணாமலைக்கு எதிரான குரல்கள் - என்ன நடக்கிறது தமிழக பாஜகவில்?

Prasanth Karthick

செவ்வாய், 11 ஜூன் 2024 (19:42 IST)
தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வென்றது குறித்து பேசப்பட்டதை விட, பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது தான் பெரும்பாலும் விவாதிக்கப்பட்டது.



பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தால் சில இடங்களில் கண்டிப்பாக வென்றிருக்கலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தனியாக போட்டியிட்டது தங்களுக்கு சாதகமாக தான் அமைந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். குறிப்பாக, “தமிழ்நாட்டில் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதே சமயம், முன்னாள் ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்ரராஜன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைந்திருந்தால் 25 முதல் 35 இடங்கள் கிடைத்திருக்கும்” எனக் கூறியிருந்தார். பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமனும், தோல்விக்கு அண்ணாமலையின் முடிவுகள் தான் காரணம் என தனது எக்ஸ் தள பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தமிழக பாஜகவில் நிலவும் இந்த முரண்பாடுகள் எதை உணர்த்துகின்றன? தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழக பாஜகவில் மாற்றங்கள் வருமா?

கூட்டணி குறித்த சர்ச்சை

நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் 23 இடங்களில் பாஜக நேரடியாகப் போட்டியிட்டது. தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்ரராஜன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னையில் போட்டியிட்டார்.

அதேபோல மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் என பிரபலமான முகங்கள் களம்கண்ட போதிலும் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. பாஜக நேரடியாக போட்டியிட்ட 9 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.



தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தருமபுரி, விருதுநகர், சிதம்பரம், ஆரணி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தென்காசி, ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டி, அதிமுக- பாஜக கூட்டணி அமைந்திருந்தால் சில தொகுதிகளை வென்றிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் தான், தமிழிசை சௌந்ரராஜன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கட்சி வளர்ந்திருந்தாலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. கூட்டணி சரியாக அமைத்திருந்தால் 35 பிரதிநிதிகள் வரை கிடைத்திருப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

அது மட்டுமல்லாது, “நான் இருக்கும்போது குற்றவாளிகளைக் கட்சிக்குள் சேர்க்க மாட்டேன். ஆனால், தற்போது சமூக விரோதிகள் பலருக்கும் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது” என்றும் கூறினார்.

இது அண்ணாமலை ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்களில் பலரும் சமூக ஊடகங்களில் தமிழிசை சௌந்ரராஜனை விமர்சித்து வருகிறார்கள்.

அண்ணாமலை மீதான குற்றச்சாட்டுகள்

தமிழ்நாடு பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவர் கல்யாண்ராமன் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள பக்கத்தில், பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"திமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு, அதிமுக உடனான பாஜகவின் கூட்டணியை முறித்துவிட்டார்" என குற்றம் சுமத்தியுள்ளார் கல்யாராமன்.

தமிழக பாஜக நிர்வாகிகள் இடையே நிலவும் இந்த முரண்பாடுகள், தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் சில சிக்கல்கள் உருவாகியுள்ளதைக் காட்டுகிறது.

தமிழிசை தலைமையின் போது இருந்த பாஜக’

தமிழக பாஜகவின் தேர்தல் தோல்விக்கும், தற்போதைய சர்ச்சைக்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காததும், பாஜக தலைவர் அண்ணாமலையின் எதேச்சதிகாரப் போக்கும் தான் காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன்.




“தமிழிசை தலைவராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை மிகவும் நிதானமாக கையாண்டார், கூட்டணி கட்சிகளையும் சரியாக வழிநடத்தினார். ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று அவர் கூறிய வாசகத்தைத் தானே இன்று வரை தமிழக பாஜகவினர் பயன்படுத்துகின்றனர்” என்கிறார் ஆர்.கே.இராதாகிருஷ்ணன்.

தொடக்கத்திலிருந்தே தடாலடியாக முடிவுகளை எடுப்பது, ஆதாரமற்ற புள்ளிவிவரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைச் சொல்வது, தமிழ்நாட்டின் தலைவர்களை விமர்சிப்பது, முக்கிய தமிழக பாஜக தலைவர்களை ஒதுக்கியது என எதேச்சதிகாரப் பாதையை அண்ணாமலை பின்பற்றினார் என்கிறார் ஆர்.கே.இராதாகிருஷ்ணன்.

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி

தமிழ்நாட்டில் அண்ணாமலையின் தலைமையில் பாஜக வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆர்.கே.இராதாகிருஷ்ணன், “தமிழ்நாடு முழுக்க பாஜக கொடிக்கம்பங்கள், போஸ்டர்கள் எனப் பார்க்கும்போது, அந்தக் கட்சி வளர்ந்துவிட்டது போல ஒரு மாயத் தோற்றம் உண்டாகலாம்.

ஆனால் உண்மையில் 2014ஆம் ஆண்டை விட, பாஜகவின் நிலை தமிழகத்தில் மோசமாகவே உள்ளது” என்கிறார்.

இதே கருத்தைக் கூறும் மூத்த பத்திரிகையாளர் பிரியன், 23 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டும் கூட பாஜகவின் வாக்கு சதவீதம் முந்தைய மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது என்கிறார்.

“தோற்றுப் போனவர்களின் வாதம் தான், வாக்கு சதவீதம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் எல்லாம். ஜெயித்து, மக்களவை சென்றால் மட்டும் தான் வெற்றி. வெற்றிகரமான தோல்வி என்ற ஒன்றே கிடையாது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

புதிய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மும்முரமாக உள்ள பாஜக மேலிடம், தமிழக தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்கும்போது அண்ணாமலை செய்த தவறுகள் அவர்களுக்கு புரிய வரும் என்கிறார் அவர்.

“ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்த கல்யாண்ராமன் வைக்கும் குற்றச்சாட்டுகள் கண்டிப்பாக அவர்கள் கவனத்திற்கு செல்லும். கடந்த ஒரு வருட செய்திகளை அலசிப் பார்த்தாலே புரியும், பாஜகவில் சேர்க்கப்பட்ட குற்றவாளிகள் குறித்து. ஆருத்ரா மோசடியை மறக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் பிரியன்.

கடந்த வருடம், மார்ச் மாதம், ஆருத்ரா கோல்ட் என்ற நிறுவனத்தின் மூலம் அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டி ஒரு லட்சம் பொதுமக்களிடமிருந்து சுமார் 2,400 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி ஏமாற்றிய விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ஹரீஷ், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மாலதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.



இந்த ஹரீஷ் பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பிறகு அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்றும், அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகவும் பாஜக கூறியது.
“ஊடகப் பலத்தை வைத்துக்கொண்டு யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், சேற்றை வாரி இறைக்கலாம் என செயல்பட்டவர் அண்ணாமலை. ஆனால் உண்மையில் களத்தில் இறங்கி வேலை பார்த்தவர் தமிழிசை. எனவே தமிழ்நாட்டில் வளர வேண்டுமென நினைத்தால், அவர் கூறுவதற்கும் பாஜக மேலிடம் செவி சாய்க்க வேண்டும்” என்று கூறினார் பத்திரிகையாளர் பிரியன்.

தமிழக பாஜகவில் மாற்றமா?

தமிழக பாஜகவிற்குள் எந்தக் குழப்பமும் இல்லையென்றும், அதிமுக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்தது பாஜக மேலிடம் தான் என்கிறார் பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன்.

“தேர்தல் முடிந்த பிறகும், கூட்டணி பற்றி பேசுவது வீண் வேலை. அவ்வாறு பேசுவது கட்சி தொண்டர்களின் உற்சாகத்தைப் பாதிக்கும். மக்கள் நல்ல விகிதத்தில் வாக்குகளை அளித்துள்ளார்கள். பாஜகவின் பலம் எல்லோருக்கும் புரிந்துள்ளது. தனித்து நின்றதால் தானே இது கிடைத்துள்ளது. எனவே அண்ணாமலை தலைமையில் கட்சி நன்றாகவே செயல்படுகிறது.” என்றார் அவர்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த கரு. நாகராஜன், ஒருவேளை மாற்றம் வந்தாலும், தேசிய கட்சி என்ற முறையில் குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மாற்றமாகத் தான் இருக்கும் என்றும், யாரையும் குறிவைத்து நடவடிக்கைகள் இருக்காது என்றும் தெரிவித்தார்.

கல்யாண் ராமன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “அது கல்யாண் ராமனின் தனிப்பட்ட கருத்து. சமூக ஊடகங்களில் பேசுவதையெல்லாம் பெரிதுபடுத்த தேவையில்லை” என்று கூறினார்.

தமிழக பாஜகவில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, “பொதுவாகவே ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் பாஜக கட்சியின் பலம், பலவீனங்களை ஆராய்ந்து சில முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம் தான். சிலர் சரியாக செயல்படவில்லை என்றால், அவர்களுக்கு வேறு பதவிகளும், நன்றாக வேலை செய்தவர்களுக்கு புதிய பொறுப்புகளும் வழங்கப்படும். ஒரு தேசிய கட்சியை நடத்துவது என்றால் அப்படி தான். மற்றபடி தமிழக பாஜக கட்சிக்குள் சர்ச்சைகள் ஏதும் இல்லை” என்று கூறுகிறார் நாராயணன் திருப்பதி.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்