டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (09:09 IST)
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதை எதிர்த்து, ஆயுதமேந்திய போராட்டங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் புலனாய்வு முகமையான எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
 
ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், ஆயுதமேந்திய குழுக்கள், வாஷிங்டன் டி சி உட்பட அமெரிக்காவின் 50 மாகாண சபைகளிலும் ஒன்று கூட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
 
எனவே அதிபர் பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த போராட்டம் எதிர்வரும் ஜனவரி 17-ம் தேதி தொடங்கி, ஜனவரி 20-ம் தேதியன்று தலைநகர் வாஷிங்டன் டி.சி-யை நோக்கி பயணப்பட இருப்பதாக, டிரம்புக்கு ஆதரவான மற்றும் வலதுசாரியினரின் வலைதளப் பதிவுகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..
 
இந்த நிலையில், ஜனவரி 16 முதல் 20-ம் தேதி வரை எல்லா மாகாண தலைமையகங்களிலும் போராட்டங்கள் நடக்கலாம் என எஃப்.பி.ஐ எச்சரித்திருப்பதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து மாகாண சபைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
டிரம்ப் பதவி காலத்துக்கு முன்பே பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பதவியேற்கும் நாளில் டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலோ, உள்ளூர், மாகாண மற்றும் ஐக்கிய நீதிமன்றங்களில் முற்றுகையிட ஒரு குழு அழைப்பு விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
 
"அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்துக்கு வெளியே பதவியேற்பதில் எனக்கு எந்த பயமும் இல்லை" என நேற்று (11.01.2021) பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் பைடன்.
 
கடந்த ஜனவரி 6-ம் தேதி, அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் ஜோ பைடனின் வெற்றியை அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரித்து சான்றளிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இதை எதிர்க்கும் விதத்தில் அமெரிக்காவின் மக்களவைக் கட்டடமான கேப்பிட்டல், டிரம்பின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. இதில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.
 
இப்போது வரை கலவரம் நடந்த அதே இடத்தில் தான், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜனவரி 6-ம் தேதி நடந்தது போல, மீண்டும் ஒரு சம்பவம் நடக்காது என பாதுகாப்பு அதிகாரிகள் அழுத்தமாகக் கூறுகிறார்கள். அதிபர் பதவியேற்பு விழாவின் பாதுகாப்பை உறுதி செய்ய சுமார் 15,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
சமீபத்தில் நடந்த கேப்பிட்டல் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அதிகரித்து வரும் பிரச்சனைகளால், அமெரிக்க அதிபர் பதவியேற்பு சம்பந்தப்பட்ட சிறப்பு செயல்பாடுகளை (Special Operations) ஆறு நாட்களுக்கு முன்பே தொடங்குமாறு அமெரிக்க பாதுகாப்புச் சேவை அமைப்பிடம் கூறியிருப்பதாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சேட் உல்ஃப் நேற்று தெரிவித்தார்.
 
மறு பக்கம் டிரம்பின் மீது பதவிநீக்க நடவடிக்கை மீதான விசாரணையை தொடங்க ஜனநாயகக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். முதலில் டிரம்பின் மீது குற்றச்சாட்டு விசாரணை வைக்கலாமா வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் பெரும்பான்மை வாக்குகள் ஆதரவாக வாக்களித்தால், செனட் சபையில் டிரம்பிடம் விசாரணை தொடங்கும். அதன் பிறகு செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் டிரம்பை பதவியிலிருந்து நீக்க சம்மதித்தால், டிரம்பின் பதவி பறிபோகும். துணை அதிபர் மைக் பென்ஸ், அதிபராக பதவியேற்பார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்