ஹாரி, மேகன் மெர்கலுக்கு நாங்கள் செலவு செய்யமாட்டோம்: டிரம்ப்

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (11:55 IST)
கனடாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் பாதுகாப்பு செலவினங்களை அமெரிக்கா ஏற்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசியுடன் தான் நல்ல நட்பு பாராட்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கான பாதுகாப்பு செலவினங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவின் பொது பாதுகாப்பு நிதியை தாங்கள் கோர போவதில்லை என ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அறிவித்திருந்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுகிற காரணத்தால், மேகனின் சொந்த ஊரான கலிஃபோர்னியாவிற்கு இந்த தம்பதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். மார்ச் 31ம் தேதி முதல் இவர்கள் பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளனர்.

ஹாரி மற்றும் மேகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அமெரிக்க அரசாங்க உதவியை பெற போவதில்லை. தனியார் பாதுகாப்பு நிதியை பயன்படுத்தப்போவதாக குறிப்பிட்டிருந்தனர்.

ஹாரி மற்றும் மேகன் கனடாவில் வசித்தபோது, கனடா அரசாங்கமும் பாதுகாப்பு செலவினங்களுக்கு பொறுப்பேற்கவில்லை. தற்போது அமெரிக்காவும் அதையே பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹாரி மற்றும் மேகன் தங்கியுள்ள கலிஃபோர்னியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,565 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலிஃபோர்னியாவின் ஆளுநர் மக்கள் அனைவரையும் தங்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இளவரசர் ஹாரியின் தந்தையான வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அண்மையில் பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது. ஆனால் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை நிர்வாகம் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்