அம்ரித் உதயான் ஆக மாறிய முகல் தோட்டம் - இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (16:04 IST)
பெயர் மாற்றத்தின் பின்னணி
டெல்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் முகல் தோட்டத்திற்கு, 'அம்ரித் உதயான்' என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ. 'ராஷ்டிரபதி பவன்' என்று அழைக்கப்படும் குடியரசுத் தலைவர் மாளிகையில் 1928-29 ஆம் ஆண்டில் இந்த முகல் தோட்டம் உருவாக்கப்பட்டது.

முகலாயர்களின் பேரில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள இந்த தோட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் என இந்து மகா சபா கோரிக்கை விடுத்திருந்தது. 

2019ஆம் ஆண்டில், 'ராஜேந்திர பிரசாத் உதயான்' என்று இந்த தோட்டத்துக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அப்போது அந்த அமைப்பு கோரி இருந்தது. ஆனால் அது ஏற்கப்படவில்லை.

ஆனால் இப்போது தேசிய தலைநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.

தோட்டத்தை உருவாக்கியது யார்?

15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த முகல் தோட்டம், ஜம்மு காஷ்மீரில் உள்ள முகல் தோட்டங்கள், தாஜ்மாஹாலைச் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் இந்தியா மற்றும் பாரசீகத்தின் மினியேச்சர் ஓவியங்களை போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தோட்டத்தை உருவாக்கும் திட்டத்தை வகுத்தவர் சர் எட்வின் லுட்யன்ஸ் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இதை உருவாக்கியவர் தோட்டக்கலைத்துறையின் இயக்குநராக இருந்த வில்லியம் முஸ்டோ.

புது டெல்லியின் தலைமை கட்டிடக் கலைஞரான எட்வின் லுட்யன்ஸின் கீழ் முஸ்டோ பணியாற்றி வந்தார். முகல் தோட்டத்தின் நிலப்பரப்பிற்கு ஒரு பசுமையான தோற்றத்தை வழங்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சர் எட்வின் லுட்யன்ஸ் மற்றும் முஸ்டோவுக்கும் இடையே இந்த தோட்டத்தின் அமைப்பை எந்த மாதிரியாக உருவாக்குவது என்ற விவாதம் நடந்த போது, முஸ்டோவின் யோசனைப்படி உருவாக்க அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதை பூர்த்தி செய்யும் வகையில் முகல் மாடலில் இந்த தோட்டத்தை அமைத்தார் முஸ்டோ.

முகல் தோட்டத்தின் அழகியல்

கிறிஸ்டோபர் ஹஸ்ஸி எழுதியுள்ள 'தி லைஃப் ஆஃப் சர் எட்வின் லுட்யன்ஸ்' (1950) என்ற புத்தகத்தில், லுட்யன்ஸின் மனைவி லேடி எமிலி பூல்வர் லிட்டன் முகலாய தோட்டத்தின் அழகைப் பாராட்டியுள்ளார். 

 "இவ்வளவு வண்ணங்களில் வாசனை மிக்க இந்த மலர்களை பார்ப்பது மனதை மயக்கும் வகையில் இருக்கிறது. நீரூற்றுகளின் நடுவே அமைந்துள்ள இந்த வட்ட வடிவ அழகிய தோட்டத்தின் அழகை வர்ணிப்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது," என்று லேடி எமிலி குறிப்பிட்டுள்ளார்.

 முகல் தோட்டம் ஒரு சர்வதேச பல்சுவையைக் கொண்டுள்ளது. இங்கு நெதர்லாந்தின் டுலிப் மலர்கள், பிரேசிலின் ஆர்கிட் பூக்கள், ஜப்பானின் செர்ரி பிளாசம் மற்றும் பருவக்கால மலர்களோடு சீனாவின் வாட்டர் லில்லி என பல நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மலர்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

முகல் முறையில் கட்டப்பட்ட கால்வாய்கள், பூத்துக் குலுங்கும் புதர்கள், ஐரோப்பிய பூச்செடிகள், புல்வெளிகள் என முகல் தோட்டத்தின் இந்த அமைப்பை பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும்.

159 வகையான ரோஜாக்கள்

முகல் தோட்டத்தில் உள்ள மலர்களிலேயே மிக பிரதானமாக 'ரோஜா' விளங்குகிறது. இங்கு மட்டும் 159 வகையான ரோஜா செடிகள் வளர்க்கப்படுகின்றன. 

அடோரா, மிருணாளினி, தாஜ்மஹால், ஈபிள் டவர், மாடர்ன் ஆர்ட், பிளாக் லேடி, பாரடைஸ், ப்ளூ மூன் மற்றும் லேடி எக்ஸ் ஆகியவை முகல் தோட்டத்தில் வளர்க்கப்படும் ஒரு சில ரோஜா வகைகள். 

இது தவிர புகழ் பெற்ற தேசிய, சர்வதேச தலைவர்களின் பெயர்களிலும் ரோஜாக்கள் இங்குள்ளன. அன்னை தெரசா, ராஜா ராம் மோகன் ராய், ஜான் எஃப் கென்னடி, ராணி எலிசபெத், கிறிஸ்டியன் டியோர் போன்றவர்களின் பெயரிடப்பட்ட ரோஜாக்கள் முகல் தோட்டத்தில் உள்ளன.

மகாபாரத கதாபாத்திரங்களான அர்ஜுனன், பீமன் ஆகியோர் பெயர்களிலும் இங்கு ரோஜாச் செடிகள் உள்ளன.

ரோஜாக்கள் தவிர, டுலிப், ஆசிய லில்லிகள், டாஃபோடில்ஸ், ஹயசிந்த் ஆகிய மலர்களுடன் பிற பருவக்கால மலர்களும் முகல் தோட்டத்தில் பூத்து குலுங்கி நம்மை வசீகரிக்கின்றன.

குளிர்கால பூச்செடிகள் உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட பருவகால மலர் வகைகள் இங்குள்ளன. இது தவிர, 101 வகை காகிதப்பூக்களில் 60 வகையான காகிதப்பூக்கள்(Bougainvillea) முகல் தோட்டத்தில் இருக்கின்றன.

அலிசம், டெய்சி, பான்சி போன்றவற்றால் அயல் மகரந்த சேர்க்கையும் இங்கு நடக்கிறது. இந்த தோட்டத்தில் மௌல்சிரி மரம், கோல்டன் ரெயின் மரம் உள்ளிட்ட சுமார் 50 வகையான மரங்களும், கொடிகளும் உள்ளன.

முகல் தோட்டத்தின் அறியப்படாத ஹீரோக்கள்

முகல் தோட்டத்தை இவ்வளவு அற்புதமான இடமாக மாற்ற தோட்டக்காரர்கள் சிந்திய ரத்தம், வியர்வை, கண்ணீர் மற்றும் உழைப்பை நாம் புறக்கணிக்க முடியுமா?

"வசந்த காலத்தின் போது முகல் தோட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியை பார்வையிட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள். இதன் உருவாக்கத்தில் பலரது திட்டமிடலும், கடின உழைப்பும் பின்னணியில் மறைந்துள்ளது என்பதை நாம் அறிவதில்லை," என்று 'குடியரசின் முதல் தோட்டம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் அமிதா பாவிஸ்கர்.

செப்டம்பர் மாதத்தில் பழுப்பு நிறத்தில் இருக்கும் பூச்செடிகளை, பிப்ரவரி மாதத்திற்குள் வானவில்லின் ஏழு வண்ணங்களில் பூத்துக்குலுங்க வைப்பதன் பின்னணியில் இருப்பவர்கள் இந்த 'மாலிகள்' என்று அவர் குறிப்பிடுகிறார்.

மாலிகளின் இடைவிடாத வேலை தான் முகல் தோட்டத்தை பிரகாசமாக்குகிறது. இந்த தோட்டக்காரர்கள், சைனி என்ற சாதியை சேர்ந்தவர்கள். இன்று இங்கு பணிபுரிந்து வரும் இவர்களில் பலரும் இரண்டு தலைமுறைகளாக இந்த வேலையை செய்து வருபவர்கள். இந்த 'மாலிகள்' பெரும்பாலும் குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே வசிக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் தோட்டத்தை பராமரிக்கும் பணியில் இருக்கும் 'மாலிகள்', பிற இடங்களுக்கு மாற்றப்படுவதில்லை. தற்போது இவர்கள் அனைவரும் மத்திய பொதுப்பணித்துறையின் பணியாளர்களாக இருக்கின்றனர்.

முகல் தோட்டங்களின் வசிகரத்திற்கு பின்னணியில், அதிகம் அறியப்படாத இவர்களின் உழைப்பும் நிறைந்து இருக்கிறது என்பதை எப்போது நினைவில் கொள்ள வேண்டும்.

முகல் தோட்டமும் அப்துல் கலாமும்

முகல் தோட்டத்தை மேலும் சிறப்பாக மாற்ற, அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மூலிகைத் தோட்டங்கள், பார்வையற்றோருக்கான தொடுதிறன் தோட்டங்கள், இசைத் தோட்டங்கள், உயிரி எரிபொருள் பூங்கா, ஆன்மீக மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் உள்ளிட்ட பலவற்றை புதிதாக கொண்டு வந்தார்.

தோட்ட வளாகத்தில் 'யோசனைக் குடில்' மற்றும் 'மரணமில்லா குடில்' என இரண்டு குடில்களையும் அவர் அமைத்தார். இங்குதான் அவரது நண்பர்களுடன் அப்துல் கலாம் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் தனது 'இண்டாமிடபிள் ஸ்பிரிட்' புத்தகத்தின் பெரும்பகுதிகளையும் அவர் இங்குதான் எழுதியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் 1998 ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் மழை நீர் சேமிப்புக்கான அமைப்பை நிறுவினார். இவரின் மனைவி உஷா நாராயணின் முன்னெடுப்பில், டுலிப் மலர்கள், இகேபனா மலர்கள் முகல் தோட்டத்தை அலங்கரித்தன.

2015 ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜி, மாளிகையில் உள்ள தோட்டங்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை பயன்படுத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். அதே நேரத்தில் ஈர நில பறவைகளை ஈர்க்க ஒரு நீர்த்தேக்கத்தையும் அமைத்தார்.

டாக்டர் ஜாகிர் உசேன் பதவி வகித்த காலத்தில் பல வகையான ரோஜாக்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி பூச்செடிகளை வளர்க்க கண்ணாடியில் ஒரு அமைப்பை நிறுவி இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டங்களில் புதிதாக கொண்டுவரப்பட்ட சிட்ரஸ் போன்சாய் மரங்களுக்காக நீலம் சஞ்சீவ ரெட்டியும், தென்னிந்திய வாழை ரகங்களுக்காக ஆர்.வெங்கட்ராமனும், தலிகானா பழத்திற்காக பிரதிபா பாட்டீலும் நினைவுக் கூறப்படுகின்றனர்.

ஆனந்தி பரூவாவின் பிறப்பிடம்

இந்திய மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளரான ஆனந்தி பரூவா குடியரசு தலைவர் மாளிகையிலேயே பிறந்தவர். அப்போது அவரது தந்தை அங்கு வேலை பார்த்து வந்தார்.

அந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்த ஆனந்தி, "பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முகல் தோட்டங்களை பொதுமக்களுக்காக திறக்கும் முடிவை நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் எடுத்தார் என்று என்னுடைய பெற்றோர் கூறுவார்கள்" என்று தெரிவித்தார்.

ஆனந்தி பரூவா தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் குடியரசு தலைவர் மாளிகையில் வாழ்ந்துள்ளார்.

முகல் தோட்டத்தை தற்போது அம்ரித் உதயான் என்று அழைப்பதற்கு தனது தலைமுறைக்கு சிறிது காலம் ஆகும் என்று கூறும் ஆனந்தி, "எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தோட்டத்தின் பழைய பெயர்தான் எங்கள் நினைவுகளில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது" என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்