செவ்வாயிலிருந்து முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது சீனா அனுப்பிய சுரொங் ரோவர் (ஊர்தி).
அந்த ரோவரின் முன் பகுதியில் எடுக்கப்பட்ட படம் நில அமைப்பை காட்டுகிறது. பின் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் சுரொங்கின் சூரிய சக்தி தகடுகளை காட்டுகிறது.
இந்த சுரொங் ரோவர் சீன நேரப்படி ஞாயிற்றுக்கிழமை செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயில் விண்கலனை வெற்றிகரமாகத் தரையிறக்கும் இரண்டாவது நாடாகியுள்ளது சீனா. இதுவரை அமெரிக்கா மட்டுமே அந்த சிறப்பைப் பெற்றிருந்தது.
தரையிறங்கியது மட்டுமல்லாமல் அதை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இயக்கும் சிறப்பையும் சீனா பெற்றுள்ளது.
செவ்வாயின் வட துருவத்தில் இருக்கும் பெரிய நிலப்பரப்பான உடோபியா பிளானிடியாவில் இந்த ரோவர் தரையிறங்கியுள்ளது. ஆறு சக்கரங்கள் கொண்ட அந்த ரோவர் அங்கு 90 நாட்கள் வரை பணியாற்றும் என சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் தேசிய விண்வெளி மையம் தனது வலைதளத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
ரோவரை பூமியிலிருந்து சுமந்துவந்த டியான்வென்-1 என்ற விண்கலனை விடுத்து கேப்ஸ்யூலுடன் செவ்வாயில் இந்த ரோவர் நுழைந்த தருணம் சிறு வீடியோவாக பதிவாகியுள்ளது.
தரைப்பகுதியை காட்டும் புகைப்படங்கள் ரோவர் தரையிறங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள நுணுக்கமான தொழில்நுட்ப கருவிகளையும் காட்டுகிறது.
அதில் இந்த ரோபோவுக்கு ஆற்றல் கொடுக்கக்கூடிய சூரிய தகடுகள், டியான்வென் - 1 விண்கலன் தொடர்பு கொள்வதற்கான ஆண்டனா, சீனாவுடன் தொடர்பு கொள்வதற்கான கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை அடங்கும்.
செவ்வாய் கோள் குறித்த ஆய்வுகளுக்காக 2000ஆம் ஆண்டில் நாசா அனுப்பிய ஸ்பிரிட் மற்றும் ஆப்பர்சூனிட்டி ரோவர்களை போன்றே இந்த சுரொங் ரோவரும் உள்ளது.
ரோவரின் சிறப்பு அம்சங்கள்
இதன் எடை 240கிலோ கிராம். புடைப்படங்கள் எடுப்பதற்கும், வழிக்காட்டுவதற்கும் ஒரு உயரமான டவர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக பொறுத்தப்பட்டுள்ள ஐந்து கருவிகள் அங்குள்ள பாறைகள், தாதுக்கள், வானிலை உட்பட பொதுவான சூழல் ஆகியவற்றை ஆராய பயன்படும்.
மேலும், அமெரிக்கா தரையிறக்கியுள்ள க்யூரியாசிட்டி மற்றும் பெர்செவரன்ஸ் ரோவர்களை போல பாறைகளின் ரசாயன தன்மை குறித்து ஆராய லேசர் கருவி ஒன்றும் சுரொங்கில் பொருத்தப்பட்டுள்ளது. நீர் மற்றும் பனியின் உள் அமைப்புகள் குறித்து ஆராய்வதற்கான ரேடார் அமைப்பும் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் பெர்செவரன்ஸ் ரோவரிலும் உள்ளது.
உடோபியா பிளானிடியாவில்தான் 1976ஆம் ஆண்டு நாசா தனது வைகிங் - 2 திட்டத்தை செயல்படுத்தியது.
3000 கிமீ வரை பரந்துள்ள இந்த பகுதியில் நெடுங்காலம் முன்பு பெருங்கடல் ஒன்று இருந்ததாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செயற்கைக்கோளின் தொலை உணர்வு தொழில்நுட்பம் மூலம் அங்கு ஆழத்தில் பனி படிந்துள்ள அறிகுறிகள் தென்பட்டன.
நாசா கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி செவ்வாய் கோளின் மேற்பரப்பில் பெர்செவரன்ஸ் ரோவர் ரோபாட்டை களமிறக்கியது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் ரோவரை நாசா களமிறக்கியது அது இரண்டாவது முறை. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை பெர்செவரன்ஸ் ரோவர் ஆராயும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செவ்வாயில் ஒரு ரோவரை தரையிறக்கும் பணியில் இருமுறை தோல்வி அடைந்துள்ள ஐரோப்பா அடுத்த ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து `ரோசலிண்ட் பிராங்க்லின் என்ற ரோவரை தரையிறக்கவுள்ளது.