இலங்கை பட்ஜெட் 2021: மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அறிக்கையில் எதற்கு முன்னுரிமை?

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (15:48 IST)
இலங்கை அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடங்கிய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
 
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய விடயங்களின் தொகுப்பு.
 
1.பெருந்தோட்டம்:
பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1000 ரூபாயாக வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
1000 ரூபாய் சம்பளத்தை வழங்க தவறும் நிறுவனங்களின் உடன்படிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான புதிய சட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக வரவு செலவுத்திட்ட உரையில் பிரதமர் கூறியிருந்தார்.
 
2.உள்நாட்டு பால் உற்பத்தி:
இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவிற்கு பதிலாக உள்நாட்டு பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
பால் உற்பத்திக்காக முதலீடு செய்யப்படும் 25 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமான தொகைக்காக நிவாரணம் வழங்கப்படும்.
 
3.சுகாதாரம்:
சுகாதார துறைக்கு மேலதிகமாக 18,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. சத்து மாவான திரிபோஷ உற்பத்திக்காக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. 
 
அத்துடன், கோவிட் தொற்றுக்கான புதிய காப்புறுதி திட்டமொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை, இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகியவற்றை மேலும் முன்னேற்றமடை செய்ய வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
4.தேசிய பாதுகாப்பு:
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவும், இலங்கையில் கடல் வளங்களை பாதுகாப்பதற்காகவும் கடற்படையை வலுப்படுத்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அபிவிருத்திக்காக 20,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போலீஸ் துறையை அபிவிருத்தி செய்வதற்கும், போதைப்பொருள் கட்டுப்பாட்டிற்கும், குற்றச் செயல்களை தடுப்பதற்கான பயற்சிகளுக்காகவும் 2500 மில்லியன் ரூபாய் மேலதிகமாக முன்மொழியப்பட்டுள்ளது.
 
5.தொழில்நுட்பம்:
தொழில்நுட்ப சேவையை மேம்படுத்துவதற்காக 8000 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கும் வழங்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
6.வெளிநாட்டு வேலை வாய்ப்பு:
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணிப்புரியும் பணியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலவணியில், ஒவ்வொரு டொலருக்கும் தலா 2 ரூபாய் வீதம் வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
7.மோட்டார் வாகனம்:
வாகனங்களை புதுப்பித்தல் மற்றும் உதிரிபாகங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரித் தொகையை குறைப்பதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
 
8.விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள்:
ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை, சர்வதேச வர்த்தக தொழில்பாட்டின் மத்திய நிலையமாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 
அதற்கான அபிவிருத்தி உபாய முறைகளையும், வழிமுறைகளையும் திட்டமிட வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்தார்.
 
9.வங்கி மற்றும் நிதி நிறுவனம்:
வங்கிகளுக்கான சட்டத்தை மறுசீரமைப்பதற்கான யோசனை, வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது.
 
வங்கி அல்லாத, நிதி நிறுவனங்களை கண்காணிப்பதற்கான புதிய சட்டத்தை வகுப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
10. மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு தடை:
மஞ்சள் மற்றும் இஞ்சி இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்கும் யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்