இலங்கையில் பரவும் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் - என்ன நிலை?

சனி, 31 அக்டோபர் 2020 (23:41 IST)
இலங்கையில் தற்போது பரவி வரும் கோவிட்-19 வைரஸானது, மிகவும் வீரியம் கொண்டது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.
 
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸானது, 'B.1.42' என்ற பிரிவை சேர்ந்த வல்லமை மிக்க வைரஸ் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிக்கின்றார்.
 
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகேவினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
இலங்கையில் இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட வைரஸ்கள், B.1, B.2, B 1.1, B.4 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவை எனவும் அவர் கூறுகின்றார்.
 
எனினும், இந்த வைரஸ், கடந்த காலங்களில் பரவிய வைரஸை விடவும் அதிக வீரியம் கொண்டமையினால், குறித்த வைரஸ் அதிவேகமாக பரவும் வல்லமையை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
அதனாலேயே மிகவும் குறுகிய காலப் பகுதியில் அதிகளவிலானோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
குறித்த வைரஸ், இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்படவில்லை எனவும், இதுவே முதற்தடவை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்த வைரஸ் இதற்கு முன்னர் எந்த நாட்டிலிருந்து பரவியது என்பது தொடர்பில் இதுவரை தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் கூறுகின்றார்.
 
வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவியிருப்பின், அதற்கான மாதிரிகள் இலங்கை ஆய்வாளர்கள் வசம் இல்லாமையினால், அந்த வைரஸ் எந்த நாட்டிலிருந்து பரவியது என்பதை உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
 
 
எனினும், இந்த வைரஸ் எங்கிருந்து பரவியிருக்கும் என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
 
எனினும், இலங்கையில் முதல் தடவையாக பரவும் வைரஸ் இது கிடையாது என்பதை மாத்திரம் உறுதியாக கூற முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிக்கின்றார்.
 
இலங்கையில் கொரோனா தாக்கம்
 
இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக இதுவரை 10,424 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இலங்கையில் இந்த மாத ஆரம்பத்தில் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கோவிட் கிளஸ்டர் மீண்டும் கண்டறியப்பட்ட நிலையில், அந்த கோவிட் கொத்தணி மிக வேகமாக பரவ ஆரம்பித்திருந்தது.
 
அதனைத் தொடர்ந்து, பேலியகொட மீன் சந்தையில் மற்றுமொரு கோவிட் கொத்தணி உருவான பின்னணியில், அது தற்போது மற்றும் பல கொத்தணிகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது.
 
தற்போது போலீஸார் மத்தியில் கோவிட் தொற்று பரவி வருகின்ற நிலையில், 60க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
 
அத்துடன், 300க்கும் அதிகமான போலீஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 6000திற்கும் அதிகமானோர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்