இலங்கை பொருளாதார நெருக்கடி: போராட்டக் களத்திற்கு கோட்டாபய ராஜபக்ச எதிர்ப்பு வாசகத்தின் பெயர்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:43 IST)
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அங்கு செய்தித்தாள்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

போராட்டக்களத்திற்கு ராஜபக்சவிற்கு எதிரான பெயர்

இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியையும் அரசாங்கத்தையும் எதிர்த்து போராடும் மக்களுக்கென்று தனி இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தின் பெயரை "கோட்டாபய ராஜபக்ச கிராமத்திற்கு செல்ல வேண்டும்" என பெயர் மாற்றம் செய்துள்ளனர் போராட்டக்காரர்கள் என்கிறது சிலோன் டுடே பத்திரிகை.

இலங்கையில் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

மழைக்கு மத்தியில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அம்பலங்கோடா பகுதியில் சுற்றுலாப் பயணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள போதுமான எரிபொருள் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணி கலைக்கப்பட்டு அவர்கள் விரயடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் மிரர்.

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டாங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் சிலாபம் நகரில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்ட மொன்றூம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டது. ஆதரவான குழுவினருக்கும் எதிரான குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. எனினும் காவல்துறையும் ராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்திவிட்டனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவினரே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியினரும் இன்னும் சில குழுவினரும் இணைந்து அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனிடையே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவினர் நின்றிருந்த பக்கத்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர் என அறிய முடிகிறது என மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி.

தமிழ் புத்தாண்டில் மின்சாரத் துண்டிப்பு இல்லை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை (ஏப்ரல் 13, 14 மற்றும் 14) முன்னிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட போவதில்லை என இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது தி ஐலேண்ட் பத்திரிகை.

அதேபோன்று 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெறும் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் எரிபொருள் சிக்கல் இந்தியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் சற்று தணிந்துள்ளது என்று இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்