கடனை திரும்ப செலுத்த இயலாமல் கைவிரிப்பு! இலங்கையில் நடப்பது என்ன?

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (13:44 IST)
அதிகபட்சமாக ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 

 
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஆகியவற்றால் தவித்து வருகின்றனர். அங்கு பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களும் அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை (ஏப்ரல் 13, 14) முன்னிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட போவதில்லை என இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதே போன்று 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெறும் 2.15 மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரியுள்ளது இலங்கை. பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்போது கடனை திரும்பி தர இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
 
முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்தபோது இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அது 2.3 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது எனவும் கூறப்படுகிறது.
 
இதனிடையே இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆம், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தைத் தொட்டுள்ள தங்கத்தின் விலை அதிகபட்சமாக ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்