ரே பரேலியின் ஆம் ஆத்மி வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட பக்ருதீன் விலகல்

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (06:38 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ரே பரேலி தொகுதியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் பக்ருதீன் இந்த தேர்தலில் போடியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான பக்ருதீன் ரே பரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஆம் ஆத்மி முன்னர் கூறியிருந்தது.
 
ஆனால் தான் போட்டியிடப்பொவதில்லை என்று பக்ருதீன் கூறியதை அடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 
மிசோரம் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
 
இதற்கிடையில் மிசோரம் மாநிலத்தில் 9ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவதாக இருந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
பிரிவினை பிரச்சனை காரணமாக மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ப்ரூ பழங்குடியினர் ஆயிரக்கணக்கானோர் திரிபுராவில் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.
 
இந்த தேர்தலில் அவர்கள் மிசோரம் மாநிலத்தில் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம அனுமதி வழங்கியுள்ளதை எதிர்த்து மிசோரம் மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
தன்னார்வ அமைப்புகளும், மாணவர்கள் கூட்டமைப்புகள் என்று பல்வேறு அமைப்புகள் நேற்று துவங்கி 3 நாட்கள் ‘பந்த்’ அறிவித்திருந்தது. எனவே வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.