ஆப்கானிஸ்தானில் பாட்டு கேட்டவர்கள் சுட்டுக் கொலை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (17:32 IST)
ஒலித்துக் கொண்டிருந்த இசையை நிறுத்த, கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருந்த திருமண விழாவில் தாலிபன்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர், 10 பேருக்கு மேல் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாக்குதல் நடத்திய மூன்று பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தாலிபன் அமைப்பின் சார்பில் அதைச் செய்யவில்லை என்றும் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
 
1996 முதல் 2001ம் ஆண்டு வரை இருந்த தாலிபன்கள் ஆட்சியில் இசைக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இசைக்கு அப்படிப்பட்ட எந்தவித அதிகாரபூர்வமான தடைகளும் விதிக்கப்படவில்லை.
 
கடந்த வெள்ளிக்கிழமை நாங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள சுர்க் ராட் மாவட்டத்தில் நான்கு தம்பதிகளுக்கு ஒன்றாக திருமணம் நடந்து கொண்டிருந்தது என அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
 
பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் பகுதியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை ஒலிக்க, உள்ளூர் தாலிபன் தலைவரிடம் அனுமதியும் பெற்றிருந்தனர்.
 
ஆனால் இரவு நேரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள், அத்துமீறி உள்ளே நுழைந்து ஒலிபெருக்கிகளை உடைக்க முயன்றனர். திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது துப்பாக்கி ஏந்திய நபர்கள் சுடத் தொடங்கினர்.
 
இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதாக தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறினார்.
 
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவினர், தாலிபன்களை எதிர்ப்பவர்கள். அவர்களும் நாங்கர்ஹார் மாகாணத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு முன்பு இதே போன்றதொரு சம்பவத்துக்கு அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா தன் மீதமுள்ள படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கிய பின், ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் நிலபரப்பையும் ஆயுதமேந்திய தாலிபன்கள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் அவர்கள் வசமானது.
 
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த 1996 - 2001 காலகட்டத்தில் மிகவும் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால் இந்த முறை சர்வதேச அரங்கில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதால் தங்களது மிதமான கட்டுப்பாடுகள் கொண்ட முகத்தைக் காட்டுகிறார்கள்.
 
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின், அவர்கள் ஒரு நாட்டுப்புற பாடகரைக் கொன்றதாகவும், அவரின் இசைக் கருவிகளை அடித்து நொறுக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. பல பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் ஏற்கனவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்