சங்கிலி புங்கிலி கதவத் தொற-விமர்சனம்

Webdunia
சனி, 20 மே 2017 (14:35 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற.


 

வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரகர். விற்காத வீடுகளைக்கூட விற்கச் செய்பவர். தனக்கென ஒரு வீட்டை அடையாளம் கண்டு, அந்த வீட்டில் பேய் இருப்பதாக புரளியை ஏற்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கிவிடுகிறார்.அதே வீட்டுக்கு ஜம்புலிங்கம் (தம்பி ராமைய்யா) என்பவரும் உரிமைகோரி அதே வீட்டில் தங்குகிறார்.ஜம்புலிங்கத்தின் மகள் ஸ்வேதா (ஸ்ரீ திவ்யா).ஜம்புலிங்கத்தின் குடும்பத்தை விரட்ட, மீண்டும் பேய் இருப்பதுபோல பயமுறுத்தலில் ஈடுபடுகின்றனர் வாசுவும் அவனது நண்பனும் (சூரி).ஆனால், அந்த வீட்டில் உண்மையிலேயே சங்கிலியாண்டவன் (ராதாரவி) என்ற பேய் இருக்கிறது. அந்த வீட்டில் ஏன் பேய் இருக்கிறது, வாசுவுக்கு வீடு கிடைத்ததா என்பதுதான் மீதிக் கதை.

அந்த பங்களாவில் மழை பெய்யும் இரவில் ஒரு தம்பதியும் குழந்தையும் வந்து தங்குகிறார்கள்.வீட்டில் வேலை பார்ப்பவர், அவர்கள் சாப்பிட உணவு வாங்கச் செல்கிறார். அவர் உணவு வாங்கிவிட்டுவரும்போதுதான் அந்தத் தம்பதிக்குத் தெரிகிறது, அந்த வேலைக்காரர் இறந்து போய் பல வருடங்களாகிவிட்டது என்பது. இந்தக் காட்சியுடன் ரகளையாகத் துவங்குகிறது படம்.

பேய் + நகைச்சுவை என்பது தமிழ் சினிமாவில் ரொம்பவுமே வெற்றிகரமான ஃபார்முலா என்பதால் இந்தப் படத்திலும் அதையே முயற்சித்திருக்கிறார்கள். அதனால், படத்தில் சூரி, தம்பி ராமைய்யா, கோவை சரளா, மயில்சாமி என பல நகைச்சுவை நட்சத்திரங்கள்.


 

ஒரு வீட்டில் ஏதோ ஒரு காரணத்தால், பேய் குடியேறுவதும் பிறகு அந்த வீட்டுக்கு வருபவர்கள் அதை வெளியேற்ற முயல்வதும்கூட உலகம் முழுவதும் பல திகில் திரைப்படங்களில் காணப்பட்ட கதைதான். அதனால் கதை எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதில்லை.

முதல் பாதியில், கதாநாயகன் வீடுகளை விற்க செய்யும் தந்திரங்கள், பெரிய பங்களாவை குறைந்த விலைக்குவாங்க செய்யும் முயற்சிகள், காதல் என விறுவிறுப்பாக நகர்கிறது படம்.

இடைவேளைக்குப் பின் பேய் அறிமுகமாகிவிட, மேலும் விறுவிறுப்பாக நகரும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான். மிகச் சாதாரணமான திகில் காட்சிகள், அதை விரட்டுவதற்கு கோவை சரளா சொல்லும் மிகச் சாதாரணமான யோசனை, நீநீநீண்ட க்ளைமேக்ஸ்...என பொறுமையைச் சோதித்துவிடுகிறது படம்.

ஜீவா, ஸ்ரீ திவ்யா ஆகியோருக்கு மேலும் ஒரு படம். குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை.சூரியின் காமெடிக் காட்சிகள் ரொம்பவும் மோசமில்லை. ஆனால், அவருடைய சிறந்த படங்களில் இந்த படமும் ஒன்று எனச் சொல்ல முடியாது.பேயாக வரும் ராதாரவி, சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

விஷால் சந்திரசேகரின் இசையில் "கட்டதொரைக்கு கட்டம் சரியில்ல" பாடல் மட்டுமே தேறுகிறது. பேய்ப்படம் என்பதாலும் நடிகர் பட்டாளத்தாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சங்கிலி புங்கிலி, அந்த எதிர்பார்ப்பை நிறைவுசெய்யவில்லை. மற்றுமொரு சாதாரண பேய்ப் படமாக கடந்துசெல்கிறது.

தம்பி ராமைய்யாவையும், தேவதர்ஷினியையும் வைத்து உருவாக்கியிருக்கும் இரட்டை அர்த்த காமெடி இல்லாமலிருந்தால் குழந்தைகளுக்கான படமாகவாவது இருந்திருக்கும்.
அடுத்த கட்டுரையில்