இந்தியாவின் அரசியலில் தலையிடுகிறது டிவிட்டர்: ராகுல் அறிக்கை

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (13:50 IST)
தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பது தொடர்பாக ராகுல் காந்தி யூடியூபில் வெளியிட்ட வீடியோ அறிக்கை. 

 
என் கணக்கை முடக்கியதன் மூலம் டிவிட்டர் நமது அரசியல் நடைமுறையில் குறுக்கிடுகிறது. நம்முடைய அரசியலைத் தீர்மானிக்கும் வகையில் தனது வணிகத்தை நடத்துகிறது ஒரு நிறுவனம். ஓர் அரசியல்வாதியாக எனக்கு இது பிடிக்கவில்லை.
 
இது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு மீதான தாக்குதல். இது ராகுல்காந்தி மீதான தாக்குதல் அல்ல. இது ராகுல்காந்தி வாயை மூடுவது அல்ல. 19-20 மில்லியன் பேர் என்னை பின் தொடர்கிறார்கள். ஒரு கருத்தைத் தெரிந்துகொள்வதற்கான அவர்கள் உரிமையை முடக்குகிறீர்கள். இது நியாயமற்றது மட்டுமல்ல, டிவிட்டர் நடுநிலையான தளம் என்ற கருத்தை மீறுவதும் ஆகும். 
 
முதலீட்டாளர்களுக்கும் இது அபாயகரமானது. ஏனெனில், அரசியல் போட்டியில் ஒரு பக்கச்சார்பான நிலை எடுப்பது டிவிட்டருக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நமது ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. டிவிட்டரில் நாம் நினைப்பதை போடமுடியும் என்பதால் அதை ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று என்று நினைத்தேன். ஆனால், அப்படி இல்லை என்று தோன்றுகிறது.
 
டிவிட்டர் ஒரு நடுநிலையான, புறவயமான தளம் அல்ல என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிகிறது. இது பாரபட்சமான தளம். குறிப்பிட்ட காலத்தில் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைதான் டிவிட்டர் கவனத்தில் கொள்கிறது.
 
இந்தியர்கள் என்ற முறையில் நாம் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும்:இந்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாலேயேசில கம்பெனிகள் நமது அரசியலைத் தீர்மானிப்பதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இதுதான் நடக்கப்போகிறதா அல்லது நமது அரசியலை நாமே தீர்மானிக்கப்போகிறோமா? அதுதான் இங்கே உண்மையான கேள்வி என்று தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்