கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனையில் இந்தியா முன்னோடியாக விளங்கி, அதன் பங்களிப்பை வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-இந்தியா கேந்திர கூட்டு ஒத்துழைப்பு அமைப்பின் (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. "புதிய சவால்களை எதிர்கொள்ளுதல்" என்ற தலைப்பில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக கருதப்படும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்று நிறைவுரையாற்றினார். அதில் இருந்து முக்கிய 10 குறிப்புகளை வழங்குகிறோம்.
•இந்தியாவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
•இந்திய ரயில், வான்வழி, தரைவழி போக்குவரத்து திட்டங்களை மேம்படுத்தியிருக்கிறோம். நிலக்கரி, சுரங்கம், ரயில்வே, பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி துறைகளில் தனியார், பொதுத்துறை கூட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
•கோவிட்-19 பெருந்தொற்று பல விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் 130 கோடி இந்தியர்களின் கனவுகள், லட்சியங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உலக அளவில் மிக குறைவான வைரஸ் உயிரிழப்பை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
•உலக அளவில் மிகப்பெரிய வீட்டு வசதி திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது. தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரத்யேக டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன் நாடு செயல்பட்டு வருகிறது.
•வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கக் கூடிய ஒரே நாடாக இந்தியா உள்ளது. 20 பில்லியன் டாலர்கள் அளவில் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. உலகம் இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளது.
•இந்தியாவில் வெளிப்படையான ஊகிக்கக்கூடிய வரி செலுத்தும் முறை உள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோர் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
•வங்கிகள் திவால் சட்டம் மூலம் வங்கித்துறையின் நிதி நிலை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
•தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
•1.3 பில்லியன் இந்தியர்கள் ஆத்ம நிர்பண் பாரத் என்ற சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க புறப்பட்டுள்ளார்கள். அது உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக இந்தியாவை உலகுக்கு காட்டும்.
•பாரம்பரிய மருந்துகளை பாதுகாக்கவும், அவை உலக அளவில் கிடைக்கவும் வசதியை உருவாக்கியுள்ளோம். கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னோடியாக பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்த மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, நீடித்த எரிசக்தி, சுகாதார சேவைகள், தொழில்நுட்பம், உலகளாவிய விநியோக சங்கிலியில் இந்தியாவின் நிலை உள்ளிட்ட இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் (வெளியுறவு), பியூஷ் கோயல் (வர்த்தகம்), அமெரித்த துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.