’ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது’: சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (14:56 IST)
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பித்துவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா, ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக எந்த வழிகாட்டுதலும் இல்லாததால், குழந்தைகள் நெடுநேரம் கணினி அல்லது செல்போன் பயன்படுத்தவேண்டியுள்ளது என வழக்கறிஞர் விமல் மோகன் வாதிட்டார். தனியார் பள்ளிகள் ஆறு முதல் எட்டு மணிநேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை தடுக்கவேண்டும் என்றும் மாணவர்களுக்கு கால இடைவெளியில் பாடங்களை நடத்தி ஓய்வு தரவேண்டும் எனவும் கோரினர்.

சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் தொடுத்த வழக்கில் பல குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக பல மணிநேரம் இணையத்தில் நேரம் செலவிடுவதால் அவர்கள் ஆபாச வலைதளம் உள்ளிட்ட பலவிதமான இணையதளங்களை பார்ப்பதற்கான சூழல் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். ஆன்லைன் வகுப்புகளுக்கு நெறிமுறைகள் இல்லாமல் செயல்படுவதால், குறைந்தபட்சம் இடைக்காலதடை விதிக்கவேண்டும் எனக் கோரினார்.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான இரண்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுத்துவதால் கண் பார்வை தொடர்பான பிரச்சனை ஏற்படுமா என எழும்பூர் அரசு கண் மருத்துவமனை விளக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என குறிப்பிட்டனர்.

ஜூலை 15ம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் தந்ததை அடுத்து, வழக்கை ஜூலை 20ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்