இந்திய பெருங்கடலில் உருவாகி வரும் புதிய நம்பிக்கைத் தீவு - மாலத்தீவுக்கு மாற்றாகுமா?

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (23:47 IST)
மாலத் தீவுகளில் மாலே தீவில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் ஹுல்ஹுமாலே என்ற நவீன தீவு உருவாகி வருகிறது. தவிர்க்க முடியாத அளவில் கடல் மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து இந்தப் புதிய தீவு உருவாக்கப் படுகிறது.
 
அரேபிய கடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தென் மேற்கில் சிதறிக் கிடக்கும் மாலத் தீவுகள், உலகெங்கும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கனவான நிலப்பரப்பாக, சிறு கவிதை போன்ற பகுதியாக மாலத் தீவுகள் அமைந்துள்ளன. வெள்ளை மணலில் பரப்பியது போல அமைந்திருக்கும் சிப்பிகளின் அழகு, ஆடம்பர தங்கும் விடுதிகள், உலக தரத்திலான நீர் விளையாட்டுகள் சுற்றுலா பயணிகளுக்குப் பிடித்தமானவையாக உள்ளன.
 
ஆனால் மாலத் தீவுகளைப் போல வேறு எந்த நாடும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை. அதன் ஆடம்பரமான கடற்கரை சொகுசு விடுதிகள் உலகப் புகழ் பெற்றவையாக இருக்கலாம். அதன் 1200 தீவுகள் கடல்மட்டத்திற்கு ஒரு மீட்டர் உயரத்தில் உள்ளன. அதில் 80 சதவீத பகுதிகள், உயரும் கடல்மட்டத்தால் அவற்றின் இருப்பே கேள்விக்குறியாகி விட்டது.
 
பூமியில் மிகவும் ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம்.
 
``பூமியில் மிகவும் ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். எனவே அதற்கேற்ப நாங்கள் மாறிக் கொள்ள வேண்டியுள்ளது'' என்று நாட்டின் துணை அதிபர் முகமது வாஹீத் ஹஸ்ஸன் 2010ல் உலக வங்கியின் அறிக்கையில் கூறியுள்ளார். இப்போதைய வேகத்தில் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தால் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 200 இயற்கை தீவுகள் கடலில் மூழ்கியிருக்கும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் தங்களுடைய இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இதை எதிர்த்துப் போராடுவதில் மாலத்தீவு மக்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள். தங்களுடைய தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டால், குடிமக்கள் குடிபெயர்வதற்காக வேறு எங்காவது இடம் வாங்கப் போவதாக 2008 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் முகமது நஷீத் அறிவித்து உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். கடலுக்கு எதிராகப் போராடுவதைக் காட்டிலும், அதனுடன் இயைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான உந்துதலை ஏற்படுத்துவதாக அந்தத் திட்டம் இருந்தது. ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களில் செய்திருப்பதைப் போல மிதக்கும் நகர்ப்புற வசதிகளை உருவாக்குவது பற்றி யோசிக்கப்பட்டது.
 
மாறாக, மாலத் தீவுகள் வேறுபட்ட புவி-பொறியியல் வடிவத்தைத் தேர்வு செய்தது: 21 ஆம் நூற்றாண்டுக்கான ஒரு நகரை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ``நம்பிக்கை நகரம்'' என கூறப்படும் அந்த நகரம் ஹுல்ஹுமாலே என பெயரிடப்பட்டு புதிய செயற்கை தீவாக உருவாக்கப்படுகிறது.
 
கோவிட் பாதிப்பு ஆரம்பமாவதற்கு முன்பு, தலைநகர் மாலே பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் புதிய தீவு உருவாகி வருவதை சுற்றுலா பயணிகள் சென்று பார்க்க முடிந்தது. விமான நிலையத்தில் இருந்து பாலத்தின் வழியாக பேருந்தில் 20 நிமிடம் பயணம் செய்தால் இந்தப் புதிய தீவின் நிர்மாணப் பணிகளைப் பார்க்கலாம்.
 
இருந்தாலும் குறுகிய நாட்களுக்கு மாலத் தீவுகளுக்கு சொகுசுப் பயணம் செல்பவர்கள், ஹுல்ஹுமாலே எந்த அளவுக்கு சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என கேள்வி எழுப்புகின்றனர்.
 
இந்தத் தீவுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவற்றுக்கு சேவைகள் கிடைக்கச் செய்வது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். வேலைவாய்ப்பின்மை அடுத்த பிரச்சினையாக இருக்கும். உலக வங்கி வெளியிட்டுள்ள 2020 அறிக்கையின்படி 15 சதவீதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளதாகக் கூறியுள்ளது.
 
கடலில் மூழ்கிப் போதல் என்ற நீண்டகால அச்சுறுத்தல் உள்ளது. கடலோர அரிப்பு அதிகரித்து வருவதால் 70 சதவீத கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. கடலோரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள வீடுகள், இதர கட்டடங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இந்த அபாயம் உளளது. உப்பு நீர் உள்ளே வருவதால் தூய்மையான குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதும் கவலைக்குரியதாக உளளது. முன்கூட்டியே கணிக்க முடியாத இயற்கைப் பேரழிவுகள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துபவையாக உளளன. 2004 சுனாமியில் மாலத் தீவுகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். அதுபோன்ற ஆபத்துகளும் கவலை தரக் கூடியதாக உள்ளது.
 
3,000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய காட்டுக்குள் விடப்பட்ட ’டாஸ்மானியா பேய்கள்’
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 என்றால் என்ன? அதற்கு எதிர்ப்பு ஏன்?
``2004 சுனாமிக்குப் பிறகு, பாதுகாப்பான தீவுகள் மூலம் பாதிப்புகளை தாங்கும் திறனை அதிகரிப்பதர்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது' என்று வீட்டுவசதி மேம்பாட்டுக் கார்ப்பரேசனின் (எச்.டி.சி.) வணிக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநராக உள்ள அரீன் அஹமது தெரிவித்தார். இந்த நிறுவனம் தான் நம்பிக்கை நகரம் உருவாக்கப்படுவதை மேற்பார்வை செய்து வருகிறது. ``பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஹுல்ஹுமாலே மிக கவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப கட்டடக் கலை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவிக்கிறார்.
 
கடலோரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பல மில்லியன் கனமீட்டர் மணல் போட்டு நிலப்பரப்பு உருவாக்குவதில், கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்துக்கு தீவு உருவாகியுள்ளது. இந்தப் புதிய தீவின் அளவு இன்னும் வளர்ந்து வருகிறது. தற்போது மாலே நகரில் உள்ள அதிக நெருக்கடியான மக்கள் தொகைக்கு, புதிய தீர்வை ஏற்படுத்தித் தருவதில் நம்பிக்கை நகரம் முக்கிய பங்காற்றும். தற்போது மாலேவில் 1 சதுர மைல் பரப்பில் (2.5 சதுர கிலோமீட்டருக்கும் சற்று அதிகம்) 130,000 பேர் வாழ்கிறார்கள்.
 
``மாலே நகரம் உலகில் அதிக நெரிசலுடன் மக்கள் வாழும் ஒரு நகரமாக உள்ளது'' என்று கத்தே பில்போட் கூறியுள்ளார். இவர் மாலத் தீவுகளில் அறிவியல் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார். கொரால்லியன் லேப் கடல்வள நிலையத்திற்காக கடல் நீரடிப் பாறை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த Ecology By Design என்ற சூழலியல் அமைப்பில் மூத்த சூழலியலாளராக பணியாற்றுகிறார்.
 
188 ஹெக்டர் பரப்புளள ஹுல்ஹுமாலே நிலப்பரப்பை உருவாக்கும் முதல்கட்டப் பணிகள் 1997ல் தொடங்கி 2002ல் நிறைவடைந்தன. இரண்டு ஆண்டுகள் கழித்து, முதல் ஆயிரம் குடியிருப்புவாசிகள் சென்று சேரும் கொண்டாட்டம் நடைபெற்றது. மேலும் 244 ஹெக்டர் நிலப்பரப்பை உருவாக்கும் பணி 2015-ல் நிறைவு பெற்றது. அதையடுத்து 2019-ன் இறுதியில் மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹுல்ஹுமாலேவில் குடியேறினர்.
 
ஆனால் ஹுல்ஹுமாலேவின் லட்சியத் திட்டம் இன்னும் பிரம்மாண்டமானது. 240,000 பேர் வரை குடியேறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 2020களின் மத்தியில் இந்த வாய்ப்பு உருவாகும். தரமான வீட்டுவசதி, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான இடவசதிகள் ஆகியவை, மாலேவில் தனிநபருக்கு உள்ளதைவிட 3 மடங்கு கூடுதலாக இங்கு இடவசதி ஏற்படுத்தப்படும்.
 
உலக சுற்றுச்சூழல் தினம்: புவியின் காதலர்களுக்கு சில முக்கியத் தகவல்கள்
 
பருவநிலை மாற்றம் என்றால் என்ன? - ஓர் எளிய விளக்கம் திட்டமிடப்படாமல் உருவான, மக்கள் நெரிசல் மிகந்த மாலே போல அல்லாமல், ஹுல்ஹுமாலே தீவு பல பசுமை நகர்ப்புற திட்டமிடல் அம்சங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது என்று அஹமது தெரிவித்தார். ``வெப்பம் அதிகரிப்பைக் குறைக்க கட்டடங்கள் வடக்கு - தெற்கு நோக்கியவையாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வெப்ப நிலை பாதிப்பு குறையும்.
 
அதிகபட்ச அளவுக்கு காற்று வரும் வகையில் தெருக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஏர் கண்டிஷனிங் வசதியை சார்ந்திருக்கும் நிலை இதன் மூலம் குறையும். பள்ளிக்கூடங்கள், மசூதிகள் மற்றும் அருகாமை பூங்காக்கள் 100 - 200 மீட்டர் நடைபயண தூரத்திற்குள் இருக்கும் என்பதால், கார் பயன்பாடு குறைவாக இருக்கும்'' என்று அவர் தெரிவித்தார். புதிய நகரின் வடிவமைப்பில் மின்சாரப் பேருந்துகளும், சைக்கிள்களுக்கான தனி பாதையும் இடம் பெற்றிருக்கும்.
 
மாறுபட்ட வீட்டு வசதித் தேவைகளும் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளது. ``ஹுல்ஹுமாலேவில் மாறுபட்ட வீட்டுவசதித் திட்டங்கள் உள்ளன: நடுத்தரம், சொகுசு மற்றும் சமூகக் குடியிருப்பு வசதிகள் உள்ளன' என்று அஹமது தெரிவித்தார்.
 
``எச்.டி.சி. நிர்ணயித்த விலையில், நடுத்தர வீட்டுவசதி திட்டத்தில் 60 சதவீத வீடுகள் விற்பனை ஆகிவிட்டன'' என்று அவர் தெரிவித்தார். சமூக வீட்டுவசதி திட்டத்தில் குறிப்பிட்ட சில பிரிவினர் வாங்க முடியும். தனியாக வாழும் பெண்கள், இடம் பெயர்வு மற்றும் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே வசிக்கலாம். அவர்களுக்கான வசதிகளுடன், அவர்கள் அணுகும் வகையிலான வசதிகள் கலந்தாலோசனையுடன் செய்யப்படுகின்றன.
 
பசுமை முன்முயற்சிகள் மற்றும் சமூக திட்டமிடலில், மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் படுகின்றன என்று அஹமது தெரிவித்தார். ஹுல்ஹுமாலே தான் ``ஆசியாவின் முதலாவது 100 சதவீதம் கிகாபிட் வசதியுள்ள ஸ்மார்ட் நகரம்' என்று அவர் கூறுகிறார். GPON எனப்படும் ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பத்தின் மூலம், குடியிருப்புவாசிகளுக்கு வேகமான டிஜிட்டல் இணைப்பு வசதி அளிக்கப்படுகிறது.
 
``அடிப்படையில் இருந்து புதிதாக ஒரு ஸ்மார்ட் நகரை உருவாக்குவதால், சவால்களைத் தாங்கும் திறன் கொண்ட நகராக - மாலத்தீவு மக்களுக்காக மாலத்தீவு மக்களால் உருவாக்கப்படும் நகரமாக இது உள்ளது'' என்று மாலத்தீவு கம்ப்யூட்டர் விஞ்ஞானி பேராசிரியர் ஹஸன் உகெயில் கூறினார்.
 
பிரிட்டனில் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் விசுவல் கம்ப்யூட்டிங் மையத்தில் இயக்குநராக உளள இவர், ஹுல்ஹுமாலே ஸ்மார்ட் நகரின் உருவாக்கத்தில் உதவி செய்து வருகிறார்.
 
பூமியில் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக மாலே உள்ளது.
 
நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்கான தேவைகளை நிறைவு செய்வதாகவும் ஹுல்ஹுமாலே உள்ளது. தன்னுடைய மின்சார தேவையில் 75 சதவீதத்தை சூரியசக்தி மூலம் பெறுவது, குடிநீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த மழைநீர் சேமிப்பு வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன.
 
இருந்தாலும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்கைத் தீவு உருவாக்குவது என்ற செயல்பாடு - குறிப்பாக கடலடி சிப்பிகளுக்கும், சுத்தமான வெள்ளை மணல் கடற்கரைகளுக்கும் புகழ்பெற்ற பகுதியில் இவ்வாறு செய்வது சரியா?
 
244 ஹெக்டர் அளவிற்கு நிலப்பரப்பை உருவாக்கும் பணியை 2015ல் பெல்ஜியம் சர்வதேச துரப்பண நிறுவனம் நிறைவு செய்தபோது, சுற்றுப் பகுதி கடலோரங்களில் இருந்து சுமார் 6 மில்லியன் கனமீட்டர் மணலை எடுத்துக் கொண்டு வந்து ஹுல்ஹுமாலே உருவாக்கத்தில் பயன்படுத்தி இருந்தனர்.
 
``நிலப்பரப்பை உருவாக்குவது பிரச்சினைகள் மிகுந்தது'' என்று நார்த்தும்பிரியா பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் ஹோலி ஈஸ்ட் தெரிவித்தார். மாலத் தீவுகளில் ஆராய்ச்சிகள் நடத்தியுள்ள இவர், கடலடி சிப்பி தீவுகள் குறித்த நிபுணராக உள்ளார்.
 
``கடலடி சிப்பி வளங்களை இது பாதிக்கும் என்பதுடன், மற்ற சிப்பி உருவாகும் தளங்களுக்குச் செல்லும் இறகுப்பூச்சிகளின் படிவுகளை உருவாக்கிவிடும். இதனால் சிப்பிகளுக்கு சூரிய வெளிச்சம் கிடைக்காமல் போய், உணவு பெற முடியாமல், வளர்ந்து, இனப்பெருக்கம் செய்ய திணறும் நிலை ஏற்படும்'' என்று அவர் கூறினார்.
 
ஆனால் மக்கள் தொகை சீராக அதிகரித்து வரும் நிலையில், நிலப்பரப்பு உருவாக்கம் என்பது மாலத்தீவு உயிரினங்களுக்கு தேவையானது என்ற உண்மையைக் காட்டுவதாக உள்ளது. இப்போதைய சிப்பி வளம் தான் அடித்தளமாக இருக்கிறது. ``ஹுல்ஹுமாலே உருவாக்கத்தில், சிப்பி வளங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், மற்ற தாக்கங்கள் குறைந்த அளவு இருக்கும் வகையிலும் முயற்சிகள் எடுக்கப் படுகின்றன'' என்று பில்போட் கூறியுள்ளார்.
 
``இருந்தபோதிலும் வேறு இடத்தில் சிப்பி வளங்கள் உருவாக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் - பல சமயங்களில் அதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இருந்தபோதிலும் மாலத் தீவுகளில் நீண்ட அனுபவம் பெற்றிருக்கும் பில்போட், அதன் தேவைகளை நன்கு அறிந்துள்ளார். சுற்றுலாவாசிகள் வருவார்கள், போவார்கள். ஆனால் உள்ளூர் மக்கள் வாழ்வதற்கும், வேலைகள் செய்யவும் நிலம் தேவை. ஏற்கெனவே ஓரளவுக்கு பாதிப்புக்கு ஆளான பகுதியில் தான் ஹுல்ஹுமாலே கட்டி எழுப்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
``மாலத்தீவுகளில் வேறு எங்கும் செய்வதைவிட இங்கு கட்டுமானம் செய்வது குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும்'' என்று அவர் கூறுகிறார். ``அதிக அளவில் படகுப் போக்குவரத்து நடைபெறும், மாசு அதிகம் இருக்கும் பகுதிகளில் இதை உருவாக்குவது பரவாயில்லை. ஓரளவுக்குப் பாதிப்பு இல்லாத, மாலத்தீவுகளுக்கு உள்பட்ட வேறு பகுதிகளில் நிலப்பரப்பை உருவாக்குவதைக் காட்டிலும் இது பரவாயில்லை'' என்று அவர் கூறுகிறார்.
 
அவருடைய இந்தக் கருத்தை உலக வங்கியின் 2020 அறிக்கை ஆதரிக்கிறது. ``கிரேட்டர் மாலே பிராந்தியம், குறிப்பாக ஹுல்ஹுமாலே பகுதியில் குறிப்பிடத்தக்க இயற்கை உயிரினங்கள் இல்லை - கடலடி சிப்பிகள் பெரும்பாலும் தரம் குறைந்துள்ளன'' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
கழிவுகளை கொட்டுவது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது - ஹுல்ஹுமாலே உருவாக்கத்தில் ஏற்படும் கழிவுகள் மற்றும் வளரும் நகரின் மக்கள் உருவாக்கும் கழிவுகளை அகற்றுவது இதில் அடங்கும். ``பெரும்பாலான கழிவுகள், இதற்காக உருவாக்கப்பட்ட தைலாபுஷி தீவில் கொண்டு போய் சேர்க்கப்படுகின்றன'' என்று பில்போட் தெரிவித்தார்.
 
பாதிப்புகளைத் தாங்கும் நகரமாக ஹுல்ஹுமாலே பார்க்கப்படும். மாலத்தீவு மக்களுக்காக மாலத்தீவு மக்களால் உருவாக்கப்படும் நகராக இருக்கும்
 
அடிப்படையில் இது குப்பைகளை சேகரிக்கும் இடமாக இருக்கும் என்ற வாதத்தை மாலத்தீவு அதிகாரிகள் மறுக்கிறார்கள். ``சுற்றுச்சூழல் மீது கட்டுமானத்தின் தாக்கத்தை குறைவாக வைக்கும் நோக்கில் மாலத்தீவுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி கண்காணித்து வருகிறது'' என்று என்னிடம் அஹமது தெரிவித்தார்.
 
உலகில் அதிக மாசுபாடு மிக்க நகரங்கள் பலவும் இந்தியாவில் இருப்பது ஏன்?
 
பருவநிலை மாற்றம்: காரணமாகும் பணக்கார நாடுகள்; பாதிக்கப்படும் ஏழை நாடுகள்
மாலத்தீவு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் ஹுல்ஹுமாலே உருவாக்கப்படும் நிலையில், கடற்கரையில் விடுதியில் படுத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், சுற்றுலாவாசிகள் வந்து பார்க்க விரும்பும் புதிய அடையாளச் சின்னமாக நம்பிக்கை நகரம் இருக்கும். மாலத்தீவுகளில் புதிதாக உருவாகி வரும் பன்முக சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனை, வாட்டர் தீம் பார்க் மற்றும் பாய்மர சவாரி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மருத்துவம் மற்றும் விளையாட்டு சார்ந்த சுற்றுலா வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று 2018ல் வெளியான உலக நிதி அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 
ஹுல்ஹுமாலே உருவாக்கத்தில் உள்ள கனவுகள், மாலத்தீவுகளின் அடுத்த தலைமுறையினரிடம் நல்ல பாராட்டுகளைப் பெறும் என்று பில்போட் நம்பிக்கை தெரிவிக்கிறார். ``மாலத்தீவில் 14 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சிப்பிவள சூழலியல் குறித்து நான் வகுப்புகள் எடுத்திருக்கிறேன். என் வகுப்பில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், உரிய சுவாச கருவிகள் வசதியுடன் கடலுக்கு அடியில் சென்றதே கிடையாது'' என்று அவர் தெரிவித்தார்.
 
``அவர்கள் பார்த்த விஷயங்கள் பிரமிப்பாக இருந்திருக்கும். ஆனால் கடலுக்கு மிக அருகில் வாழ்ந்தும், கடலுக்கு அடியில் செல்லும் வாய்ப்பு ஒருபோதும் கிடைக்கவில்லை என்பது வருத்தமானதாக இருக்கும். கடல் உயிரினங்கள் குறித்து இன்னும் நேரடி கல்வி அதிகரிக்கும்போது, அவற்றைப் பாதுகாப்பதில் இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரிக்கலாம்'' என்று அவர் கூறினார்.
 
நம்பிக்கை நகரை உருவாக்குவதற்கும் அப்பாற்பட்டு, ஒரு தீவை உருவாக்கும் பாதையை மாலத்தீவு மக்கள் உருவாக்கி வருகிறார்கள். எதிர்காலத்தில் மாலத்தீவுகளை, நம்பிக்கை நாடாக மாற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்