பாலின அடையாளம் பற்றிய நவீன கருத்துகள் குடும்ப அமைப்பை சிதைக்கும்: வாடிகன் கருத்து

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (19:11 IST)
பாலின அடையாளங்கள் குறித்த நவீன கால கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்தும் ஓர் ஆவணத்தை வெளியிட்டுள்ளது கத்தோலிக்க கிறித்துவ தலைமையகமான வத்திக்கான்.
திங்கள்கிழமை இந்த 31 பக்க ஆவணம் வெளியாகியுள்ளது. 'ஆண்கள் மற்றும் பெண்கள், அவன் அவர்களை படைத்தான்' என்ற பெயரில் கற்பிக்க வேண்டிய வழிகாட்டல் ஆவணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
 
கல்வி நெருக்கடிகள் குறித்து ஆவணம் பேசுகிறது, மேலும் பாலின அடையாளங்கள் குறித்த தற்போதைய விவாதங்கள் இயற்கை எனும் கருத்தையே அழிக்கவல்லது; குடும்ப நிறுவன அமைப்பை சிதைக்கவல்லது என குறிப்பிட்டுள்ளது.
 
ஒருபாலுறவுக்காரர்கள் உள்ளிட்ட எல்ஜிபிடி குழுமக்கள் பெருமை கொள்ளும் மாதத்தில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் உள்ள கருத்துக்கள் உடனடியாக எல்ஜிபிடி குழுக்களால் விமர்சனத்துக்குள்ளானது.
 
சிறுவர்களுடன் பணிபுரியும் நபர்களுக்கு 'கற்பித்தல் வழிகாட்டியாக' இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. கத்தோலிக்க கல்விச் சபை இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
 
இந்த ஆவணம் போப் ஃபிரான்ஸிசால் கையெழுத்திடப்படவில்லை.
 
ஆவணத்தில் இருப்பது என்ன?
பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது இந்த ஆவணம். ஆனால் திருநங்கை/ திருநம்பி சமுகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் எப்படி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் சில வழிகாட்டுதல்களை கொண்டிருக்கிறது.
 
பாலின அடையாளங்கள் பற்றிய நவீன கால புரிதல்களை இந்த ஆவணம் விமர்சித்துள்ளது.

பாலுறவு மற்றும் பாலின அடையாளங்களில் மாற்றம் ஆகியவை ''உணர்ச்சி மற்றும் ஆசைகளின் பேரில் சுதந்திரம் குறித்த குழப்பான கருத்தை விதைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை'' என்கிறது இந்த ஆவணம்.
 
''பாலினம் என்பதை தனிப்பட்ட நபர்கள் முடிவு செய்யமுடியாது. இறைவன் படைப்பில் ஒருவர் ஆணா பெண்ணா என்பது தீர்மானிக்கப்படுகிறது'' என்கிறது அந்த ஆவணம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்