கடலில் விழுந்த இந்தோனீசிய விமானம்: ஒரு கருப்புப் பெட்டி மீட்பு, இன்னொன்று தொடர்ந்து தேடல்

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (08:44 IST)
கடந்த சனிக்கிழமை 62 பேருடன் கடலில் விழுந்த இந்தோனீசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
 
இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஜாவா கடலில் விழுந்த இந்த போயிங் 737 ரக விமானம், ஸ்ரீ விஜயா ஏர் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமானது.
 
கடலிலிருந்து மீட்கப்பட்ட விமானத் தரவு பதிவு கருவி கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டாலும், விமான ஓட்டி அறையின் குரல் பதிவு கருவியை மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
 
குரல் பதிவுக் கருவி, தரவுப் பதிவுக் கருவி இரண்டுமே கருப்புப் பெட்டி என்றே அழைக்கப்படுகின்றன.
 
இன்னொரு கருப்புப் பெட்டியும் மீட்கப்படும் பட்சத்தில், விமானம் விழுந்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல்களை அறிய முடியும் என்று இந்தோனீசிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
 
26 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்த இந்த விமானம் கடந்த மாதம் நடத்தப்பட்ட பறக்கும் தகுதியை பரிசோதிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தது.
 
அடையாளம் காணப்பட்ட முதல் நபரின் உடல்
 
கடந்த சனிக்கிழமை ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் கிளம்பி போண்டியானக் என்ற தீவுக்கு சென்றுக்கொண்டிருந்த இந்த எஸ்.ஜெ.182 என்ற இந்த விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த விமானத்தில் பயணித்தவர்களில் முதலாவதாக 29 வயதான பணிப்பெண் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தோனீசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் பெருந்தொற்றல் பல மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த விமானம், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பிறகே மீண்டும் பறக்க அனுமதி வழங்கப்பட்டதாக அந்த நாட்டின் போக்குவரத்துத்துறை நேற்று (ஜனவரி 12) தெரிவித்தது.
 
கடந்த சனிக்கிழமையன்று, உள்ளூர் நேரப்படி 14:36 (07:36 GMT) மணிக்கு இந்த விமானம் 10,900 அடி (3.3 கி.மீ) உயரத்தை எட்டியதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் (கே.என்.கே.டி), முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, அது திடீரென செங்குத்தாக சரிந்து 14:40 மணியளவில் 250 அடியை எட்டியதாக தெரியவந்துள்ளது.
 
விமானத்தின் சேதமடைந்த இறக்கையிலுள்ள விசிறியுடன் விசையாழி வட்டும் (Turbine disc) கிடைத்துள்ளதால், விமானம் நடுவானில் வெடித்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் தவறானது என்று தெரியவந்துள்ளதாக அந்த இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் சூர்ஜான்டோ தஜ்ஜோனோ தெரிவித்துள்ளார்.
 
தேடல் பணியின் தற்போது நிலவரம்விமானம் கடலில் விழுந்தது முதல் அதை கண்டறியும் பணியில் இந்தோனீசிய அரசின் பல்வேறு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
உயிரிழந்தவர்களின் உடல்களையும், விமான ஓட்டி அறையின் குரல் பதிவு கருவியையும் கண்டறியும் பணிகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன.
 
முன்னதாக, விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டறிய பயன்படும் கருவியொன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
விமானத்தின் சில உடைந்த பாகங்கள், பயணிகளின் உடைகள் உள்ளிட்டவை ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளன.
 
இந்த தேடுதல் பணியில் சுமார் 2,600 நபர்களும், 50 கப்பல்கள் மற்றும் 13 விமானங்களும் ஈடுபட்டுள்ளதாக ஏ.எஃப்.பி. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
 
கடலிலிருந்து மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்களை கொண்டு முதல்கட்ட ஆய்வுகள் முழுவீச்சியில் நடந்துவந்தாலும், இது நிறைவுற சுமார் ஓராண்டு வரை ஆகுமென்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
விமானத்தில் இருந்தவர்கள் யார் யார்?
 
விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்களில் 7 பேர் சிறார்கள், 3 பேர் குழந்தைகள் என்றும் இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்தார்.
 
போர்னியா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த நகருக்கு செல்வதற்கான பயண நேரம் வழக்கமாக ஒன்றரை மணி நேரம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்