இந்தியா - சீனா எல்லை பதற்றம்: 300 சொற்களில் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (14:07 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவு மோசமாகி வருகிறது. இமயமலை பகுதியில், தங்களின் சர்ச்சைக்குரிய எல்லையில் இரு பெருநாடுகளும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன.
 
இந்த பதற்றத்திற்கான காரணம் என்ன என்பதை 300 சொற்களில் இந்த கட்டுரை விளக்குகிறது. இந்த பதற்றத்துக்கான காரணமாக சரியாக வரையறுக்கபடாத 3,440கிமீட்டர் நீள எல்லை உள்ளது.
 
எல்லையில் உள்ள நதிகள், ஏரிகள், பனிப்பாறைகளால் சில நேரம் கோடுகள் மாறக்கூடும். இதன்மூலம் ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். சில சமயம் அது சண்டைக்கு வழிவகுக்கும்.
 
மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் இருநாடுகளும் கட்டமைப்புகளை உருவாக்க போட்டியிட்டு வருகின்றன. மிக உயரமான வான் தளத்திற்கு புதிய சாலை ஒன்றை இந்தியா கட்டுமைத்ததே ஜூன் மாதம் சீன படைகளுடன் நடைபெற்ற மோதலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் இருபது பேர் கொல்லப்பட்டனர்.
 
சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக உள்ளது?
இந்த வருடம் மோதல் போக்கு அதிகமாகவே உள்ளது. ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் துப்பாக்கி இல்லாமல் தடிகளுடன், ஆணிகள் கொண்ட தடிகளுடன் இருநாட்டு ப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல், 1975ஆண்டுக்கு பிறகு இருநாட்டுக்கும் இடையே நடைபெற்ற மோசமான மோதலாக கருதப்படுகிறது. அப்போதிலிருந்து இருநாட்டு உறவும் மோசமடைந்து வருகிறது.
 
ராணுவத்தினர் உயிரிழந்தனர் என இந்தியா தெரிவித்தது. ஆனால் சீனா இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகஸ்டு மாதம், ஒரு வாரத்தில் இரு முறை எல்லையில் பதற்றத்தை தூண்டுவதாக சீனா மீது இந்தியா குற்றம் சுமத்தியது.
 
ஆனால் அந்த குற்றச்சாட்டை சீனா மறுத்தது. தனது படைகள் மீது இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்துவதாக சீனா குற்றஞ்சாட்டியது. சீனா காற்றில் சுட்டதாக இந்தியா தெரிவித்தது.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையெனில் எல்லையில் 45 வருடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது இதுவே முதல்முறை. 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் ஒன்று எல்லைக்கு அருகில் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் பயன்படுத்துவதை தடை செய்கிறது.
 
’பேச்சுவார்த்தையில் தீர்வு’
இருநாடுகளும் ஒரு ஒரே முறை 1962ஆம் ஆண்டு போரில் ஈடுபட்டன. அந்த போரில் இந்தியா தோல்வியுற்றது. மற்றொரு சண்டை வந்தால், தாங்கள் ஏற்கனவே சண்டையிட்ட எல்லை பகுதி மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என இருதரப்பும் கருந்துகின்றனர்.
 
இருதரப்பும் பின்வாங்கவில்லை என்றால், அந்த பிராந்தியத்தில் ஒரு ஸ்திரமற்றத்தன்மை ஏற்படும். இருதரப்பும் மீண்டும் மோதிக் கொண்டால் இரு பலமிக்க நாடுகளுக்கு மத்தியில் பதற்றம் அதிகரிக்கும். இருநாடுகளுமே அணு ஆயுதங்களை கொண்ட நாடாகும்.
 
இருநாடுகளுக்கு மத்தியில் நிலவும் ராணுவ பதற்றத்தால் அரசியல் பதற்றமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இந்த சூழல் பொருளாதாரச் சரிவுக்கு வித்திடுவதாகவும் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது. புகழ்பெற்ற டிக்டாக் செயலி உட்பட சீனாவுடன் தொடர்புடைய 150 செயலிகளுக்கு இந்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது.
 
இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்