சமீபத்தில் சர்ச்சையான கேரளா தங்கக் கடத்தல் வழக்கில், இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராகவும், தீவிரவாத செயல்பாடுகளுக்காகவும், கேரள தங்கக் கடத்தல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பதாகக்கூறி, இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்க என்.ஐ.ஏ-வின் சிறப்பு புலனாய்வுக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும் பொருளாதார நிறுவனங்களின் புலனாய்வு அமைப்பான மத்திய பொருளாதார புலனாய்வு நிறுவனம் இதுதொடர்பாக அளித்த அறிக்கை ஒன்றையும் சிறப்புப் புலனாய்வுக்குழு ரகசிய ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் வெளியுறவுத் துறை கட்டமைப்புகள் மூலமாகக் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்டது. ஐக்கிய அரபு அமீகர தூதரகத்திற்கு சேர வேண்டிய பை ஒன்றில் இந்த தங்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரித்தால் மட்டுமே, இதன் பின் வெளியுறவுத் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து தெரியவரும் என்று சிறப்புப் புலனாய்வுக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரமீஸ், விசாரணையின்போது, தான்சானியாவில் அவருக்கு வைர தொழில் இருப்பதாகவும், அங்கிருந்து தங்கம் வாங்கி ஐக்கிய அரபு அமீகரத்திற்கு விற்றதாகவும் கூறினார். இந்நிலையில், தாவூத் இப்ராஹிமுக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தொழில் தொடர்புகள் குறித்து ஏற்கனவே அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
தான்சானியாவில் தாவூதின் தொழில்களை கையாளும் பெரோஸ் என்பவரும் தென் இந்தியாவை சேர்ந்தவர் என்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.