சீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும் வெடித்த போராட்டம் - போராட்டக்காரர் மீது துப்பாக்கி சூடு

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (18:36 IST)
சீனப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும், போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காண்பிக்கின்றன.

ஹாங்காங் போராட்டங்களில் பங்கெடுத்த ஒருவரின் மீது போலீசாரின் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக ஹாங்காங் போலீஸ் செய்தி ஒன்று உறுதிபடுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விரைவில் போலீசார் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் சூழலில், முதல்முறையாக போராட்டக்காரர் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது இதுவே முதல்முறையாகும்.

ஹாங்காங்கின் அட்மிரால்டி பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வாங், தற்போது போராட்டங்களை கட்டுப்படுத்த போலீசார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்துவதாக கூறுகிறார்.

பிபிசியின் ஹாங்காங் செய்தியாளர் இது குறித்து தெரிவிக்கையில், இந்த போராட்டங்களில் காயமடைந்த 18 வயது முதல் 52 வயதுடைய 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ஒருவர் மிகவும் தீவிர காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

சீனப் புரட்சியின் 70வது ஆண்டுவிழாவை எதிர்மறையாக எதுவும் நடக்காமல் கொண்டாட நினைத்தது சீனா.

ஆனால், ஹாங்காங் அரசு சமீபத்தில் நிறைவேற்ற முயன்ற குற்றப்பின்னணி உடையவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்ட மசோதா, ஹாங்காங் அரசு மற்றும் சீனாவுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியது. அதனால் ஹாங்காங் அரசு அந்தச் சட்ட வரைவை விலக்கிக்கொண்டது.

இன்று காலை பெய்ஜிங்கில் சீன அரசு கொண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில் ஹாங்காங்கில் சீன எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன.
 

ஹாங்காங் போராட்டம் தொடர்புடைய படங்கள்






1898 முதல் பிரிட்டனால் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹாங்காங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், 'ஒரு நாடு இரு அமைப்பு முறை' எனும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

இந்தத் தன்னாட்சி உரிமை 2047இல் முடிவுக்கு வரவுள்ளது. எனினும், இது எப்போதும் தொடர வேண்டும் என்றும், ஹாங்காங் இன்னொரு சீன நகரத்தைப் போல் ஆகிவிடக்கூடாது என்றும் அந்த நகர மக்கள் விரும்புகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்