தற்செயலாக புலப்பட்ட மாயன் நகரம் முதல், ராக்கெட் கேட்ச் வரை: 2024-ஆம் ஆண்டின் வியத்தகு அறிவியல் முன்னேற்றம்

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (12:08 IST)

முழு சூரிய கிரகணத்தை பல லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். தற்செயலாக ஒரு நகரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தை அழிவின் விளிம்பில் இருந்து மீட்கும் முயற்சிகள் வெற்றியை கொடுத்தன... இந்த ஆண்டு அறிவியல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகள் இவை


 


 

ஈலோன் மஸ்கின் ஸ்டார்ஷிப் விண்வெளிக்கு சென்று திரும்புவதை மிகவும் எளிதாகவும், விலை குறைவானதாகவும் மாற்றியது. இது இந்த ஆண்டின் மிக கவனம் பெற்ற முக்கிய நிகழ்வாகும். மேலும் இந்த ஸ்டார்ஷிப் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டை உள்ளடக்கிய கண்டுபிடிப்பாக அறியப்படுகிறது.

 

ஆனால் அனைத்து செய்திகளும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகள் இல்லை.2024-ஆம்ஆண்டுதான் அதிக வெப்ப நிலையை கொண்ட ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாத மகிழ்ச்சியான செய்திகளும் நம்மை வந்து சேர்ந்துள்ளது. இந்த ஆண்டு அறிவியல் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய 7 முக்கிய நிகழ்வுகள் என்ன?

 

ராக்கெட் கேட்ச்
 

அக்டோபர் மாதம், ஈலோன் மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒரு பகுதி எந்த ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதோ அதே இடத்திற்கு திருப்பி கொண்டுவரப்பட்டது.

 

ஸ்பேஸ்எக்ஸின் லோயர் பூஸ்டர் ராக்கெட் கடலில் சென்று விழுவதற்கு பதிலாக, அது எந்த ஏவுதளத்தில் ஏவப்பட்டதோ அங்கேயே திரும்பி வந்தது. ஐந்தாவது சோதனை முயற்சியின் முடிவில், அந்த ராக்கெட், மெக்கானிக்கல் ஆர்ம்ஸ் என்று அழைக்கப்படும் இயந்திர கரங்களுக்குள் லாவகமாக வந்து விழுந்தது.

 

நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய, விரைவாக நிலைநிறுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டும் என்ற ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் லட்சியத்தை நிஜமாக்கியுள்ளது இந்த சோதனை முயற்சி.

 

அந்த பூஸ்டர் பாதுகாப்பாக வந்து தரையிறங்கிய பிறகு, 'வரலாற்று புத்தகங்களுக்கான நாள் இது' என்று ஸ்பேஸ்எக்ஸ் பொறியியல் ஆய்வாளர்கள் கூறினார்கள்.

 

பிரமிக்க வைக்கும் ஈக்களின் மூளை
 

ஈக்களால் நடக்க முடியும். மிதக்க முடியும். ஏன், ஆண் ஈக்களால் தங்களின் இணையை ஈர்க்க பாடல்களும் கூட பாட இயலும். இத்தனையும் குண்டூசியின் தலையை விட சிறிய அளவிலான மூளையை வைத்து செய்து வருகிறது ஈக்கள்.

 

 

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பழ ஈக்களை ஆய்வு செய்து வந்த ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் மூளையின் வடிவம், அதில் உள்ள 1,30,000 செல்களின் இணைப்பு மற்றும் 50 மில்லியன் இணைப்புகளை வரைபடமாக்கியுள்ளனர்.

 

நம்முடைய மூளைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் உதவும் என்று மூளை நிபுணர் ஒருவர் கூறியிருந்தார்.

 

சிந்தனையின் செயல்களை (the mechanism of thought) கண்டறிய இந்த ஆய்வு பெரிய அளவில் உதவும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார்.

 

தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மாயன் நகரம்
 

நீங்கள் கூகுளில் ஏதோ ஒன்றை தேடப் போக, அதன் 16வது பக்கத்தில், தொலைந்து போன மாயன் நகரத்தை கண்டுபிடித்தால் எப்படி இருக்கும்?

 

அமெரிக்காவின் டூலேன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் லூக் ஆல்ட்-தாமஸ் அப்படி ஒரு அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.

 

 

கூகுளில் எதையோ தேடி, தொலைந்து போன மாயன் நகரத்தை கண்டுபிடித்தார் அவர். கூகுளில் அவர் சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்காக மெக்சிகோ நிறுவனம் ஒன்று நடத்திய லேசர் சர்வேயின் முடிவுகளை அவர் கண்டறிந்தார்.

 

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் நுட்பங்களை பயன்படுத்தி அவர் அந்த தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது, பலரால் கண்டுபிடிக்க முடியாமல் போன பெரிய பழமையான நகரத்தை கண்டுபிடித்தார். கி.பி. 750 முதல் 850 காலகட்டத்தில் 30 - 50,000 மக்கள் அந்த நகரத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

மெக்சிகோவில் மரங்களால் மூடப்பட்டுள்ள அந்த நகரத்தில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பிரமிடுகளை கண்டுபிடித்துள்ளனர். அரங்கம் மற்றும் விளையாட்டு திடல் போன்றவற்றையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

அடர்ந்த மரங்களுக்கு அடியில் உள்ள கட்டமைப்புகளை கண்டறிய லிடார் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்திய போது இந்த பகுதிகள் கண்டறியப்பட்டன. இந்த இடத்திற்கு வலேரியானா என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

 

ஐ.வி.எஃப் மூலம் கருதரித்த காண்டாமிருகம்
 

உலகில் இரண்டே இரண்டு வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் உள்ளன. இந்த விலங்கினத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வெற்றி அடைந்தன.

 

ஐ.வி.எஃப். தொழில்நுட்பத்தின் உதவியோடு பெண் காண்டாமிருகம் கர்ப்பம் தரித்தது. இப்படியாக நடப்பது இதுவே முதல்முறை.

 

 

ஆய்வகத்திலேயே உருவாக்கப்பட்ட கருவை வெற்றிகரமாக பெண் காண்டாமிருகத்தின் உடலில் பொருத்தி வெற்றி பெற்றனர் ஆராய்ச்சியாளர்கள். 13 முறை முயற்சி செய்த பிறகே இந்த வெற்றியை அவர்கள் உறுதி செய்தனர்.

 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக கர்ப்பமான அந்த பெண் காண்டாமிருகம் தொற்று காரணமாக உயிரிழந்தது. உடற்கூராய்வு முடிவுகள், "அதன் வயிற்றில் வளர்ந்த ஆண் காண்டாமிருகம் 6.5 செ.மீ வளர்ச்சி அடைந்திருந்தது. மேலும் நல்ல முறையில் வளர்ந்து வந்த அந்த கரு உயிர் பிழைத்திருக்க 95% வாய்ப்புகளைக் கொண்டிருந்தது," என்பதை உறுதி செய்தது.

 

தற்போது ஆராய்ச்சியாளர்களின் கைவசம் 30 வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் கருக்கள் உள்ளது. சில கருக்களை வைத்து மீண்டும் முயற்சியில் இறங்குவதை அடுத்த கட்ட திட்டமாக ஆராய்ச்சியாளர்கள் வைத்துள்ளனர்.

 

இயற்கையின் அழிவை குறைத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்
 

இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) மனித செயல்பாடுகள் உயிரினங்களின் பேரழிவுக்கு வழிசெய்கிறது என்று கூறும் நேரத்தில், இயற்கை குறித்த நல்ல செய்திகளையே நாம் கேட்காதது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

 

ஆனால் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இயற்கையை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உலக அளவில் பல்லுயிர் பெருக்கத்தின் இழப்புகளை திறம்பட குறைத்துள்ளது என்று தெரிவிக்கிறது.

 

வெவ்வேறு நாடுகள் மற்றும் கடல்களில் உயிரினங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட 655 நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர் ஆராய்ச்சியாளர்கள். பல ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

 

ஒவ்வொரு மூன்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரண்டு செயல்பாடுகள் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

சுனுக் சாலமன் மீன்களை பாதுகாப்பது துவங்கி, ஆக்கிரமிப்பு பாசியினங்களை அழித்தது வரை பல நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றது. ஆராய்ச்சியாளர்கள், அழிந்து வரும் விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு இது நம்பிக்கை அளிக்கும் என்று கூறுகின்றனர்.

 

லட்சக்கணக்கானவர்களை ஸ்தம்பிக்க வைத்த சூரிய கிரகணம்
 

மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவில் தோன்றிய முழு சூரிய கிரகண நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே நிலவு செல்லும் போது, இந்த வானியல் நிகழ்வு நடைபெறுகிறது.

 

 

பூமியில் இருந்து ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை சூரிய கிரகணம் நடைபெறுவதை பார்க்க இயலும். ஆனால் பல நேரங்களில் மக்கள் தொகை குறைவான இடங்களிலேயே இவை நடைபெறுகின்றன. ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தை டாலேஸ் போன்ற நகரங்களில் உள்ள மக்களும் பார்க்கும் வகையில் அரங்கேறியது.

 

நம்பிக்கையின் மரம்
 

இங்கிலாந்தின் ஹாட்ரியன் சுவருக்கு நடுவே வளர்ந்திருந்த புகழ்பெற்ற சிக்காமோர் கேப் மரம் 2023ம் ஆண்டு வெட்டப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த மரத்தை அதற்கு முன்பு பார்த்திருந்தனர்.

 

இந்த மரம் வெட்டப்பட்ட செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்த மரத்தில் இருந்து பெறப்பட்டு பாதுகாக்கப்பட்ட விதைகள் மற்றும் கிளைகளில் இருந்து புதிய கன்றுகள் வளர்ந்துள்ளன. புகழ்பெற்ற இந்த மரத்திற்கு எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் வகையில் அவை அரங்கேறியுள்ளது.

 

இந்த விதைகளை பாதுகாக்கும் நேஷனல் டிரஸ்டிற்கு சென்ற பிபிசி, அந்த புதிய நாற்றுகளை நேரில் பார்வையிட்டது.

 

இந்த மரம் வெட்டப்பட்டபோது அதில் இருந்து கிடைத்த விதைகளையும் கிளைகளையும் பாதுகாத்து வருகிறது இந்த அமைப்பு.

 

"நம்பிக்கையின் மரம்" என்று இந்த புதிய நாற்றுகள் தொண்டு நிறுவனங்களுக்கும், குழுக்களுக்கும், தனி நபர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்