இலங்கை முன்னாள் கடற்படை தளபதி அமெரிக்காவுக்குள் நுழைய தடை - காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (23:13 IST)
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட, அவரது மனைவி ஸ்ரீமதி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா விதித்த தடைக்கு, இலங்கை அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது.
 
இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட, அவரது மனைவி ஸ்ரீமதி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் கடற்படை தளபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் வசந்த கரன்னாகொட, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.
 
இதனாலேயே, இந்த தீர்மானத்தை எட்டியதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
 
ராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான திட்டத்தின் 2023 சட்டத்தின் 7031(C) பிரிவிற்கு அமைய, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு தடை விதிப்பதன் ஊடாக, ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமையை பாதுகாத்தல், மனித உரிமையை மீறுவோருக்காக தண்டனையை முடிவுக்கு கொண்டு வருதல், பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இலங்கையின் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலுக்கான ஊக்குவிப்பின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமையும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் கூறுகின்றது.
 
இலங்கை, அமெரிக்கா இடையிலான 75 வருட இரு தரப்பு உறவானது, பகிரப்பட்ட வரலாறு, பெறுமதிகள், சுதந்திரமான மற்றும் திறந்த இந்து - பசுபிக் பிராந்தியத்திற்கான அர்ப்பணிப்பின் அடிப்படையிலானது எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
 
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதி வடமேல் மாகாண ஆளுநரும், கடற்படையின் முன்னாள் தளபதியுமான வசந்த கரன்னாகொடவிற்கு தடை விதித்து அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை கவலையை தெரிவிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
 
இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை மிகுந்த கவலையை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு நேற்றைய தினம் அனுப்பியுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
அந்த கடிதத்தில் , இலங்கையின் நீண்டகால இரு தரப்பு பங்குதாரர் என்ற வகையில், அமெரிக்கா உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒருதலைபட்சமாக செயற்படுவது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிருஷ்டவசமானது.
 
இந்த சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை தொடந்தும் மேற்கொள்ளும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
 
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளும், சகோதரர்களுமான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா இந்த ஆண்டு ஆரம்பத்தில் தடை விதித்திருந்தது.
 
இவர்களை தவிர, பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றிய சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டிஆராய்ச்சி ஆகியோருக்கும் கனடா தடை விதித்திருந்தது.
 
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தியே இந்த தடையை கனடா விதித்திருந்தது.
 
கனடாவின் இந்த தீர்மானத்திற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
 
இலங்கையில் 3 தசாப்த காலமாக இடம்பெற்ற உள்நாட்டு போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது.
 
இறுதிக் கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரச படைகளில் தாக்குதல்களில் உயிரிழந்ததாகவும், இறுதி கட்ட போரின் போது இலங்கை அரசாங்க படைகளினால் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்