ஜூன் 20, 2013ல் ராயல்ஸ் அஸ்காட் பந்தயத்தின் மூன்றாம் நாளில் லேடிஸ் டே அன்று ராணியின் குதிரை தங்கக் கோப்பை வென்றதையடுத்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் ஜான் வாரன் இருவரும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கின்றனர்.
பாக்ஸில் தன் பந்தய மேலாளர் ஜான் வாரன் உடன் அமர்ந்திருந்த ராணி, மகிழ்ச்சியில் புன்னகைத்தபோது படம்பிடிக்கப்பட்டது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் விடுமுறை மாளிகைக்கு செல்லும்போது நீங்கள் கவனிக்கக் கூடிய முதல் விஷயம், அவருடைய 'எஸ்டிமேட்' என்ற பந்தய குதிரையின் முழு உருவச் சிலை.
சாண்ட்ரிங்காமில் அமைந்துள்ள இச்சிலை, கிரீடம் தரித்த ஒருவரால் அரிதாக ஈடுபடக்கூடிய விளையாட்டான குதிரைப் பந்தயத்தின் மீதான அவருடைய நிரந்தர விருப்பத்துக்கு சாட்சியமாக உள்ளது.
2013இல் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரை பந்தயத்தில் 'எஸ்டிமேட்' தங்க கோப்பையை வென்றது. அந்த பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரையை ஆட்சி செய்யும் ஒருவர் வைத்திருப்பது 207 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை.
"அதுவொரு அற்புதமான பயணத்தின் முடிவு," என ஜான் வாரன் பந்தயம் குறித்து தெரிவித்தார்.
குதிரை பந்தயங்களில் அவருடைய குதிரைகள் குவித்த 1,800க்கும் மேலான வெற்றிகளுள் எஸ்டிமேட் பெற்ற வெற்றியும் அடங்கும். குதிரை பந்தயத்தில் குதிரை உரிமையாளராகவும் அதனை வளர்ப்பவராகவும் ராணியின் பங்களிப்புகளுக்காக 2021ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சாம்பியன்ஸ் சீரிஸ் ஹாலில் அவருக்கு சிறப்பிடம் அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டார்.
உலக அளவிலான மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்த தீவிரமான அலுவல் பணிகளிலிருந்து தன் கவனத்தைத் திசை திருப்பும் ஒன்றாக ராணிக்கு குதிரை பந்தயம் அமைந்தது.
"'புதிய வண்ணப்பூச்சியின் வாசனை இல்லாத ஓர் இடத்திற்கு வருவது நன்றாக இருக்கிறது என அவர் என்னிடம் சொல்வார்," என பயிற்சியாளர் ரிச்சர்ட் ஹானன் தெரிவித்தார். ராணியின் தினசரி செய்திகளுடன் ரேஸிங் போஸ்ட் செய்தித்தாளும் சேர்த்து வைக்கப்படும்.
2013ல் அஸ்காட் பந்தயத்தில் தங்கக் கோப்பையை வென்ற 'எஸ்டிமேட்' குதிரையுடன் இரண்டாம் ராணி எலிசபெத்.
குழந்தை பருவத்திலிருந்தே அவருடைய வாழ்க்கையின் அங்கமாக குதிரைகள் இருந்துள்ளன. நான்காவது பிறந்த நாளுக்கு தனது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் பரிசளித்த பெக்கி என்றழைக்கப்படும் ஷெட்லாண்ட் போனி இன குதிரையில் சவாரி செய்ய கற்றுக்கொண்டார்.
இரண்டாம் உலக போரின் போது, வில்ட்ஷயரில் அரச குதிரைகளின் பயிற்சியை காண தன் தந்தையுடன் சென்றபோது குதிரைப் பந்தயம் மீதான அவருடைய ஆர்வம் அதிகரித்தது. "தொழுவத்தில் குதிரைகளை தட்டிக்கொடுக்க முடிந்தது," என அவர் பின்னர் நினைவுகூர்ந்தார். "பாரம்பரியமான ஒரு குதிரையின் பட்டுப் போன்ற மென்மையை நான் அதற்கு முன்பு உணர்ந்தது இல்லை." என அவர் தெரிவித்தார்.
மே, 1945-இல் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்த இரண்டு வார காலத்திற்கு பிறகு, தன் பெற்றோருடன் முதல்முறையாக அவர் அஸ்காட்டுக்குச் சென்றபோது ராணி முதன்முறையாக குதிரைப் பந்தயம் ஒன்றில் தோன்றினார்.
ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம் பின்னர் அவருடைய விருப்பமான பொது நிகழ்வுகளுள் ஒன்றாக மாறிப்போனது. இதில், அவர் மொத்தமாக 24 வெற்றிகளை சுவைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ராணி விண்ட்சர் கோட்டையிலிருந்து அணிவகுப்புடன் வரும்போது அவர் என்ன நிறத்திலான தொப்பியை அணிவார் என பந்தயம் கட்டுவார்கள் - இதில், நீல நிறம் பிரபலமான தேர்வாக இருந்தது.
தன் தந்தையான மன்னர் ஐந்தாம் ஜார்ஜிடமிருந்து சாண்ட்ரிங்காமில் உள்ள 'ராயல் ஸ்டட்' என்ற பந்தய குதிரை வளர்ப்பு மையத்தைப் பெற்றார் ராணி. இங்கு ராணியின் வெற்றிகரமான பல குதிரைகள் வளர்க்கப்பட்டன.
1949ல் ஃபோண்ட்வெல் பார்க்கில் மோனவீன் என்கிற குதிரை மூலம் அவருக்கு முதல் வெற்றி கிட்டியது. மேலும், கிரேட் பிரிட்டனில் அதிக பரிசுத்தொகை வென்ற குதிரைகளின் உரிமையாளர் என்ற சாம்பியன் பட்டத்தை 1954 மற்றும் 1957ல் என இருமுறை வென்றுள்ளார்.
"தன் குதிரைகளை பார்வையின் மூலமே அவர் அடையாளம் கண்டுகொள்வார். அவற்றின் மன மற்றும் உடல் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுபவராகவும், பராமரிப்பாளர்களிடம் குதிரைகள் குறித்து விரிவாக பேசுபவராகவும் இருந்தார்," என தொலைக்காட்சி தொகுப்பாளர் கிளேர் பேல்டிங் தெரிவித்தார். இவருடைய தாத்தா, தந்தை மற்றும் சகோதரர் அனைவரும் ராணியின் குதிரைகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் ஆவர்.
"குதிரைகள் மீதான அவரது கவனத்திற்கு ஒரு சிறிய உதாரணம், ராணி குதிரைகளை பார்க்க தொழுவத்திற்கு வரும்போது ஒருபோதும் வாசனை திரவியத்தை பயன்படுத்த மாட்டார். ஏனெனில், அது இளம் குதிரைகளிடையே டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை தூண்டிவிடும் என்பதால் அவர் வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதில்லை" என தெரிவித்தார்.
"குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கும் மாண்ட்டி ராபர்ட்ஸை தீவிரமாக பின்பற்றுபவராக ராணி இருந்தார். குதிரையை வளர்ப்பதில் அவருடைய சில நுணுக்கங்களை ராணி பின்பற்றினார். உதாரணத்திற்கு இளம் குதிரைகளை நீல நிற விரிப்பின் மீது நடக்கும்படி செய்வார், இதன்மூலம் அக்குதிரைகள் தண்ணீரில் நடப்பதற்கு பயப்படுவதில்லை.
"இந்த பயிற்சிகளின் விளைவாக அக்குதிரைகள் பல்வேறு பந்தய தளங்களுக்கு வரும்போது சிறப்பாக நடக்கும்" என அவர் தெரிவித்தார்.
தெளிவான செய்திகளை குறிக்கும் வகையிலேயே குதிரைகளுக்கு ராணி பெயரிடுவார். அதாவது, டியூட்டி பவுண்ட், கான்ஸ்டிட்யூஷன், டிஸ்க்ரீஷன் ஆகிய பெயர்களை குதிரைகளுக்கு சூட்டியுள்ளார்.
குதிரை சவாரியில் ஆர்வம் மிகுந்த அவர், 1981 இல் ட்ரூப்பிங் ஆஃப் தி கலர் அணிவகுப்பின் போது, குதிரையேற்றம் செய்து தன் வீரத்தை வெளிப்படுத்தினார்.
குதிரை பந்தயங்களில் எஸ்டிமேட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரச குதிரைகளின் வெற்றிகளை பார்த்த பயிற்சியாளர் சர் மைக்கேல் ஸ்டௌட், ராணியுடன் பணியாற்றியது மகிழ்வான ஒன்று என தெரிவித்தார்.
"ராணியின் புரிதல், ஆழ்ந்த அறிவு மற்றும் கற்பதில் உள்ள ஆர்வம் ஆகியவற்றால் அவருக்கு பயிற்சி அளிப்பது எப்போதும் அழுத்தம் இல்லாததாகவே இருந்தது," என அவர் தெரிவித்தார்.
"எப்போதும் முன்னோக்கி சிந்திப்பவராக அவர் இருந்தார். இந்த விலங்குடன் நான் என்ன செய்யப் போகிறேன், அதனை நான் வளர்க்கப் போகிறேனா, அதை யாரிடம் வளர்க்க வேண்டும், அவற்றின் குணம், வேகம், உழைப்பாற்றல் குறித்து அவர் சிந்திப்பார். இந்த யோசனைகளால் அவர் ஈர்க்கப்பட்டார்."
அவருடைய விருப்பமான ஜாக்கியாக பிராங்கி டெட்டோரி என்பவர் இருந்தார். பெரிய பந்தயங்களில் வெற்றி பெற்ற பின்னர், இருவரும் அவ்வப்போது நகைச்சுவைகளை பகிர்ந்துகொள்வார்கள். அரசர் ஆறாம் ஜார்ஜ் மற்றும் ராணி எலிசபெத்தின் அஸ்காட் பந்தயத்தில் வெற்றிக்குப் பின்னரும் இவ்வாறு நடந்ததாக டெட்டோரி நினைவுகூர்ந்தார்.
ராணியின் விருப்பமான ஜாக்கியாக பிராங்கி டெட்டோரி என்பவர் இருந்தார்.
ராணியின் விருப்பமான ஜாக்கியாக பிராங்கி டெட்டோரி என்பவர் இருந்தார்.
குதிரைகளின் உரிமையாளராக ராணி ஐந்தில் நான்கு பிரிட்டிஷ் கிளாசிக் பந்தயங்களில் வென்றுள்ளார்.
தனது வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு 1977 இல் அவருடைய டன்பெர்ம்லைன் குதிரை ஓக்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றது, பின்னர் செயின்ட் லேகர் பந்தயத்திலும் வெற்றி பெற்றது. அதற்கு முன்பு, அவருடைய கரோசா குதிரை (ஓக்ஸ் பந்தயம் 1957), பால் மால் குதிரை (1958ல் 2,000 கினியாஸ் தங்க நாணயங்கள்) மற்றும் ஹைகிளேர் குதிரை (1974ல் 1,000 கினியாஸ் தங்க நாணயங்கள்) பந்தயங்களில் வென்றுள்ளது.
ராணியின் முடிசூடுதல் ஆண்டான 1953-ல் ஆரோல் என்ற குதிரை, பின்சா என்ற குதிரைக்கு இரண்டாவதாக வந்ததால் டெர்பி பந்தயத்தில் வெற்றியடைய முடியவில்லை.
மேலும், 2012இல் கார்ல்டன் ஹௌஸ் என்ற குதிரை வெற்றியை தவறவிட்டு மூன்றாவதாக வந்தது.
அஸ்காட் பந்தயத்தில் எஸ்டிமேட் வெற்றி பெற்ற 12 மாதங்களுக்குப் பின் பரிசுத்தொகையாக 1,50,000 பவுண்டுகள் (1,72,000 டாலர்கள்) கிட்டியது. அதன்பின் பல ஆண்டுகளாக குதிரைப் பந்தயங்களில் ராணி பல மில்லியன்கள் பரிசுத்தொகையை வென்றுள்ளார். அவை, பயிற்சிக் கட்டணங்கள் மற்றும் பிற செலவுகளால் ஈடுசெய்யப்பட்டாலும், பந்தயங்களில் பங்கேற்பதில் உள்ள ஆர்வத்தால் அதில் வெற்றியடைவது இரண்டாம் நிலையாகத் தோன்றின.
மற்ற வேலைகளில் இருந்து "தப்பிக்க" குதிரைகள் மிகப்பெரும் வாய்ப்பாக இருப்பதாக வாரன் கூறினார், மேலும் பிரிட்டிஷ் பந்தயத்திற்கு ராணியின் ஆதரவு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தது என அவர் தெரிவித்தார்.
"அவர் ஒரு ராணியாக வளர்க்கப்படாமல் இருந்திருந்தால், அவர் குதிரைகளுடன் ஒரு தொழிலைக் கொண்டிருந்திருப்பார். ஏனெனில், அது அவருடைய டிஎன்ஏவிலேயே இருந்தது," என்று அவர் கூறினார்.