சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் தொடரும் சந்தேகம் - பிணவறை ஊழியர் வெளியிட்ட புதிய தகவல்கள்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (10:02 IST)
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கூப்பர் மருத்துவமனை யில் அவரது உடல் கூராய்வு செய்யப்பட்டபோது உடனிருந்ததாக கூறப்படும் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்கள் சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன.
 
கூப்பர் மருத்துவமனையின் பிணவறை ஊழியர் எனக் கூறும் ரூப்குமார் ஷா என்பவர் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைப் பார்த்தபோது அது (எனக்கு) தற்கொலையாகத் தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் இருந்தன. நான் என் சீனியரிடம் பேசினேன். ஆனால் அவர் அதைப் பற்றி பின்னர் விவாதிப்போம் என்று கூறினார்.
 
உடல் கூராய்வு அறிக்கையில் என்ன எழுத வேண்டும் என்பது மருத்துவரின் வேலை. சுஷாந்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை அவரது புகைப்படத்தைப் பார்த்தாலே அனைவரும் சொல்லலாம். விசாரணை முகமைகள் என்னை அழைத்தாலும் அவர்களிடமும் இதை சொல்வேன்" என்று தெரிவித்துள்ளார் அந்த ஊழியர்.
தொடர்கதையாகும் கேள்விகள்
திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கி 'காய் போ சே' எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சுஷாந்த், 'எம்.எஸ்.தோனி' திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.
 
திரை வாழ்க்கையின் வெற்றிப்பயணத்தை தொடங்கி சிறிது காலமே ஆகியிருந்த சுஷாந்த், 2020, ஜூன் மாதம் பதினான்காம் தேதி உயிரிழந்தார்.
 
அவரது உடல் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன்படி, சுஷாந்த் மரணம் தற்கொலை தான் எனவும் கொலைக்கான எந்த தடயமும் இல்லை எனவும் கூறப்பட்டது.
 
2020, ஜூலை 25 அன்று, பாட்னாவில் சுஷாந்தின் குடும்பத்தினர் அவரது இறப்பு தொடர்பாக சந்தேகம் இருப்பதாகப் புகாரளிக்க, இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
 
சில நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க அனுமதியளித்தது உச்சநீதிமன்றம்.
 
இந்த சிபிஐ விசாரணை தொடங்கியபோது, மருத்துவர் சுதிர் குப்தா தலைமையிலான ஏழு பேர் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, சுஷாந்தின் உடற்கூராய்வை மறுமதிப்பீடு செய்தது.
 
ஆனால், இதன் முடிவில் சுஷாந்தின் மரணம் தற்கொலையே எனக் கூறப்பட்டது. "தூக்கில் தொங்கியதைத் தவிர உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இறந்தவரின் உடல் மற்றும் உடைகளில் போராட்டத்திற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை," என்று சுதிர் குப்தா தெரிவித்தார்.
 
இந்த சிபிஐ விசாரணையில் உடற்கூராய்வில் ஈடுபட்ட கூப்பர் மருத்துவமனை மருத்துவர்களும் விசாரிக்கப்பட்டனர். எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ முடித்து விட்டதாக சில தகவல்கள் பரவின.
 
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக 2020, அக்டோபர் 15 அன்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஆர்.கே. கெளர், "ராஜ்புத் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சிபிஐ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக ஊடகங்களில் சில ஊகச் செய்திகள் வந்துள்ளன. இந்த அறிக்கைகள் ஊகமானவை மற்றும் பிழையானவை என்பதை மீண்டும் வலியுறுத்தலாம்," என்று கூறினார்.
 
சமீபகாலமாக இந்த வழக்கு தொடர்பாக பெரிதும் பேசப்படாமல் இருந்த நிலையில், கூப்பர் மருத்துவமனை ஊழியரின் இந்த புதிய கருத்துக்கள் மீண்டும் இவ்விவகாரத்தை விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
சுஷாந்த் மரணம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளும் அதைப்பற்றிய விசாரணைகளும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை தொடர்கதையாகவே இருக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்