செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (11:27 IST)
"நாம் நிச்சயமாக சரியான இடத்தில் இருக்கிறோம்." என்று செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
 
செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி அமைப்பின் (நாசா) பெர்சவரென்ஸ் உலவு வாகனத்தை இயக்கும் விஞ்ஞானிகள் குழுவுக்கு இப்போதுதான் மூச்சு வந்திருக்கிறது.
 
செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அளிக்கும் இடத்திலேயே தங்களது ரோபோ ஆய்வு செய்து கொண்டிருப்பதாக இப்போது அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கான தடயங்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன.
 
கடந்த பிப்ரவரி மாதம் "பெர்சி" என்ற செல்லப் பெயரும் அழைக்கப்படும் பெர்சவரென்ஸ் உலவு வாகனம், ஜெசெரோ எரிப் பள்ளத்தில் செவ்வாயின் தரையைத் தொட்டது. அதன் பின்னர் தனது சுற்றுப்புறத்தில் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.
 
இந்த வாரம் "சயின்ஸ்" இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரை, இந்தப் படங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் படங்கள் எதை உணர்த்துகின்றன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
ஒரு காலத்தில் ஓர் ஆற்றின் நீரைக் கொண்டு நிரம்பிய பிரமாண்டமான ஏரி இருந்த தரையில்தான் இப்போது பெர்சி சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை உறுதி செய்கிறது. இது 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது செவ்வாயின் காலநிலை தீங்கற்றதாக, உயிர் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்திருக்கும்.
 
பெர்சி உலவு வாகனம் சேகரித்திருக்கும் தகவல்களில் இருந்து ஒரு நதி, ஏரியில் வந்து கலந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது. ஏரியைச் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக ஆற்றின் ஓட்டம் குறைந்து, பூமியில் நாம் காண்பதைப் போன்ற ஆப்பு வடிவிலான வண்டல் மண் படுகை அல்லது டெல்டா உருவாகி இருக்கிறது.
 
இது போன்ற சூழலில் தான் நுண்ணுயிர்கள் செழித்து அவற்றின் ரசாயன தடயங்கள் பாதுகாக்கப்படும்.
 
"ஜெசெரோ பள்ளத்தில் ஒரு டெல்டா இருந்தது என்று எங்களுக்குத் தெரியாதா? என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். ஆனால் தரையில் இறங்கும் வரை, அது உறுதியாகத் தெரியாது. ஏனென்றால் அது வண்டல் விசிறியாகக் கூட இருந்திருக்கலாம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியரும், சயின்ஸ் கட்டுரையை எழுதியவர்களில் ஒருவருமான சஞ்சீவ் குப்தா கூறினார்.
 
வண்டல் விசிறி என்பது ஒரு வகையான நில வடிவம். தீவிரமான வெள்ளம் போன்ற ஆற்றல்வாய்ந்த நிகழ்வுகளின் போது மண் படிந்து இது உருவாகிறது. இந்தப் பகுதி உயிர் வாழ்க்கைக்கு உகந்த அமைப்பு அல்ல. செவ்வாயில் இருந்ததாகக் கருதப்படும் நுண்ணுயிரிகள் இப்படிப்பட்ட வண்டல் விசிறிகளைக் காட்டிலும், டெல்டாவுடன் தொடர்புடைய அமைதியான ஆழ்ந்த நீரையேயே விரும்பியிருக்கும்.
செவ்வாயின் முக்கியமான டெல்டா அமைப்பிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் பெர்சி தரையிறங்கியது. ஆனால் அதன் தொலைநோக்கிப் பார்வை மிகவும் துல்லியமானது. ஆற்றல்வாய்ந்தது. கோடியக் என்று அழைக்கப்படும் தனியாக இருக்கும் குன்று அல்லது மேட்டில் அதன் திறன் பிரமிக்க வைக்கிறது.
 
இப்போது எஞ்சியிருக்கும் கோடியக் என்ற அமைப்பில் ஒரு டெல்டாவால் உருவான அடுக்குகளைப் பார்க்க முடிகிறது.
 
அடிப்பகுதி, முன்பகுதி, மேல்பகுதி என இதை மூன்றாகப் பிரிக்கலாம். அடிப் பகுதியில் கிடைமட்ட படிவுகள் இருக்கின்றன. இவை, ஆறானது ஏரியைத் தொடுவதற்கு முன் தொலைவிலியே கொட்டிய மிக நுண்ணிய வண்டல் மண்ணால் ஆனவை.
 
இவற்றுக்கு மேலே, சாய்ந்த முன் அடுக்குகள் இருக்கின்றன. இவற்றில் ஏரியை ஒட்டி டெல்டாவின் சரிவுகளில் விழுந்த வண்டல்கள் உள்ளன. டெல்டாவின் விளிம்புகள் தூரத்திற்கு விரிவடைந்த பிறகு ஆறு கொட்டிய வண்டல்களைக் கொண்ட மேலடுக்கும் அதிகமாக உள்ளது. இதுவும் கிடைமட்டமானது.
 
கோடியக் மற்றும் டெல்டா அமைப்புக்கு மேல் கற்குவியல்கள் உள்ளன. இவை வெள்ளம் போன்ற நதி மற்றும் ஏரி நீரைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை நமக்குக் கூறுகின்றன.
 
"நீர் இயக்கத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது காலநிலை தொடர்பானதா என்பது நமக்குத் தெரியாது" என்று கூறுகிறார் குப்தா
 
"ஆனால் இந்த பெரிய பாறைகளை நகர்த்துவதற்கு வெள்ளம் போன்ற ஒன்று தேவைப்படலாம் அல்லது பனி ஏரிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்"
 
 
"பூமியில் இமயமலை போன்ற இடங்களில் திடீர் ஏரி வெடிப்புகளைப் பார்க்கிறோம். கங்கைப் படுகையில், ஆற்று மணலுடன் பாறைகளும் கலந்திருக்கின்றன. பனி ஏரியிலிருந்து திடீர் வெள்ளம் ஏற்படுவதே இதற்குக் காரணம்" என்று குப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
பெர்சி விஞ்ஞானிகள் குழு ஆற்று படுகையின் தொடக்கப் பகுதிக்கு உலவு வாகனத்தை அனுப்ப இருக்கிறது. அங்கு இருப்பதாகக் கருதப்படும் சகதிக் கற்களை துளையிடும். ஜெசெரோவின் ஏரிப் பள்ளத்தின் விளிம்பில் உள்ள கார்பனேட் பாறைகளையும் ஆய்வு செய்யும்.
 
பல்வேறு இடங்களில் இருந்து இரண்டு டஜன் பாறை மாதிரிகளை சேகரிக்கும் பணியை பெர்சி மேற்கொண்டிருக்கிறது. இந்த மாதிரிகள் 2030களின் முற்பகுதியில் பூமிக்கு கொண்டு வரப்படும். அவற்றின் மூலம் செவ்வாயின் மேற்பரப்பில் நுண்ணுயிரிகள் இருந்தனவா என்பது ஆய்வகங்களில் உறுதி செய்யப்படும்.
 
பாறையை பூமிக்குக் கொண்டு வரும் திட்டம் இதற்கு முன் செயல்படுத்தப்படாத அளவுக்கு மிகவும் நவீனமானது. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பில் உள்ள நாசாவின் கூட்டு அமைப்புகள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. எங்கெல்லாம் பெர்சி மாதிரிகளைச் சேமித்து வைக்கிறதோ அங்கிருந்து அவற்றை சேகரிப்பதற்கு மற்றொரு உலவு வாகனம் அனுப்பப்பட இருக்கிறது.
 
அது பிரிட்டனில் உருவாக்கப்படுகிறது. இது பாறை மாதிரிகளை எடுத்து ராக்கெடுக்கு மாற்றும். ராக்கெட் செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு ஏவப்படும். பின்னர் அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயற்கைக் கோள் மூலம் பாறை மாதிரிகள் பூமிக்கு அனுப்பப்படும்.
 
"செவ்வாயின் ஆய்வில் நாம் மிகவும் உற்சாகமான கட்டத்துக்குள் நுழைய உள்ளோம்" என்று பிரிட்டன் விண்வெளி ஆய்வு மையத்தின் சூ ஹார்ன் தெரிவித்தார்.
 
"அடுத்த மாதம் மாதிரி மாதிரிகளை எடுக்கும் உலவு வாகனத்தின் திறன் பரிசோதிக்கப்பட இருக்கிறது. அதனால் செவ்வாயின் மாதிரிகளை ஆய்வு செய்யும் கனவு விரைவில் நனவாகும்."

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்