டெல்லி மத நிகழ்வால் தெலங்கானாவில் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (16:21 IST)
தமிழகத்தில் கோவிட்-19 தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை(மார்ச் 31) தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,251ஆக உள்ளது. இவர்களில் 102 குணமடைந்துவிட்டனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நேற்று (மார்ச் 30) வரை 67ஆக இருந்த எண்ணிக்கை, புதிதாக ஏழு நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், 74 ஆக அதிகரித்துள்ளது.

இதில் உயிரிழந்த ஒருவர் மற்றும் குணமடைந்த ஆறு பேர் ஆகியோரும் அடக்கம். இப்போது மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 67ஆக உள்ளது.

புதிதாக தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர்கள் நல்ல உடல்நிலையோடு இருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றைக் குறைக்கும் நடவடிக்கையாக, கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் 12 மாவட்டங்களில் காணொளி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என கூறப்பட்டள்ளது

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் தொலைவு வட்டத்தை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் (Containment zone) என்றும் இரண்டு கிலோமீட்டர் தொலைவை இடைப்பகுதி (Buffer zone) என வரையறுக்கப்பட்டு, இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆரம்பக்கட்ட சோதனை நடத்தியுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, 12 மாவட்டங்களில் 1,08,677 வீடுகளில் உள்ள சுமார் மூன்று லட்சம் நபர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் அரியலூர் ஆகியவை சோதனை நடத்தப்பட்ட 12 மாவட்டங்கள் ஆகும்.

டெல்லி நிசாமுதீன் நிகழ்வால் தெலங்கானாவில் உயிரிழப்பு

டெல்லி நிசாமுதீனில் உள்ள ஒரு மசூதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தெலங்கானாவில் உயிரிழந்தனர்.

இதே கூட்டத்தில் கலந்துகொண்ட மத குரு ஒருவர் கடந்த வாரம் ஸ்ரீநகரில் உயிரிழந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த கூட்டத்தில் மலேசியா, இந்தோனீசியா, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேந்தவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 'தப்லிகி ஜமாஅத்' நடத்திய இந்த கூட்டத்தில் 2000 பேர் கலந்துகொண்டனர் என்பதை முஸ்லிம் மத அமைப்பு ஒன்று உறுதி செய்கிறது.

ஆனால் இந்தியாவில் ஊரடங்கு தடை விதிக்கப்படும் முன்பே நிலவிய கொரோனா அச்சத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 1400 பேர், ஜாமத்திலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை பரிசோதிக்க கூட்டத்தில் கலந்துகொண்ட 300 பேர் டெல்லியில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மத குரு மீது முதல் தகவல் அறிக்கை பதியும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்